பிரதமர் மோடி காட்டில் பயணம் செய்த வீடியோவினை பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்ட் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ளார்.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து உலகம் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம், காட்டுக்குள் வன விலங்குகளின் தன்மை என்ன? என்பது குறித்தும், காட்டில் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டால் மனிதர்கள் தப்பிப்பது எப்படி? என்பது குறித்தும் அப்பகுதிகளுக்குச் சென்று விளக்கம் அளிப்பார். 

இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்ஸுடன் பயணித்துள்ளார்.  இது குறித்து பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘180 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு பிரதமர் மோடி குறித்து தெரியப்போகிறது. விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வனப்பகுதிக்கு சென்றுள்ளார். 

 

இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும்’ என பதிவிட்டுள்ளார். இதற்கிடையே ஒரு நேர்காணலின் போது பிரதமர் மோடி, தான் 5 நாட்கள் காட்டில் தனியாக இருந்ததாக கூறியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.