பிரதமர் மோடியை அவமானப்படுத்தி, அதன் மூலம் அனைத்து இந்திய பக்சோட்(ஏ.ஐ.பி.) அமைப்பு பணம் ஈட்டுவது தவறானது என்று மோடியைப் போல் தோற்றமுள்ள எம்.பி.  ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கேரளாவின் பையனூர் ரெயில் நிலையத்தில் பிரதமர் மோடியைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் ரெயிலுக்காக காத்திருப்பதுபோன்ற புகைப்படத்தை மும்பையைச் சேர்ந்த அனைத்து இந்திய பக்சோட் அமைப்புவௌியிட்டது.

அதனுடன், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும்  அதில் நாயின் மூக்கு, காதுகளை பொறுத்தி வௌியிட்டு இருந்தது.  இது தொடர்பாக ஏ.ஐ.பி. அமைப்பு மீதுமும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த புகைப்படத்தில் இருக்கும் மோடி போன்ற தோற்றமுடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(வயது64) என்பவர் ‘மிட் டே’ என்ற நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “ பிரதமர் மோடி சர்வதேச அளவில் மதிக்கப்படக்கூடிய நபர். என்னுடைய ‘ரோல்மாடலும்’ அவர்தான். நாட்டுக்காக உழைத்து வரும் ஒரு மனிதரை இவ்வாறு அவமானப்படுத்தி பணம் ஈட்டுவது தவறானது.

யாருடைய புகைப்படத்தையும், மாற்றங்கள் செய்து, அதன் மூலம் பணம் ஈட்ட யாருக்கும் உரிமையில்லை. நான் அரசியல்வாதியும் இல்லை, சமூக ஆர்வலரும் இல்லை. சாதாரண மனிதர், எதிர்கள் கூட யாரும் எனக்கு இல்லை. என்னைக் கடந்து செல்கிறவர்கள் என்னைப் பார்த்து மோடிபோன்ற தோற்றத்தில் இருப்பதாகக் கூறி செல்பி எடுத்துச் செல்கிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.

எம்.பி. ராமச்சந்திரன் மும்பையில் ஒருதனியார் நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.