ஊழல், கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்க நான் எடுத்திருக்கும் முடிவு, எதிர்கால சந்ததியினருக்கானது, இளைஞர்களின் தலை எழுத்தையே மாற்றும் என்று பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்.
கடும் தாக்கு
மேலும், தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் பணம் பெற்று சீட் வழங்கும் கட்சித் தலைமையை எனது ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு கடுமையாக பாதிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளை தாக்கி நேற்று பேசினார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக ஆக்ரா நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

அடுத்த தலைமுறை
அப்போது அவர், “நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ1000 நோட்டுக்களை தடை செய்த என் அறிவிப்பு, உண்மையில் சாமானிய மக்களை பாதிக்காது. அவர்களுக்கு அடுத்த 50 நாட்களுக்கு சில சங்கடங்களையும், கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியது இருக்கும். ஆனால், அடுத்த தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.
எனது இந்த நடவடிக்கையால் நாட்டில் நிச்சயம் நாட்டில் ஊழலையும், கருப்பு பணத்தையும் கட்டுப்படுத்த முடியும். இந்த நடவடிக்கையால், சிலர் ஏராளமானதை இழந்துவிட்டார்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் ஏராளமான பணத்தை கொடுத்து எம்.எல்.ஏ.வாக வரலாம். எம்.எல்.ஏ. ஆனபின், ஏராளமான பணத்தை பத்திரமாக மறைத்து வைக்கலாம்.
தலை எழுத்தை மாற்ற
இந்த பணத்தால் என்ன நடக்கும்?. இந்த பணம் யாருடையது? இது ஏழை மக்களையும், நேர்மையான மக்களையும் சேர்ந்தது இல்லையா?. இது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். என்னுடைய இந்த நடவடிக்கை, நடுத்தர மக்களையும், ஏழைமக்களையும் சுரண்டுவதை முடிவு கொண்டுவருவதை உறுதி செய்யும்.

நான் மேற்கொண்ட இந்த நடவடிக்கை யாரையும் துன்புறுத்த அல்ல. வருங்கால தலைமுறையினருக்கும், இளைஞர்களின் தலை எழுத்தை மாற்றவும் எடுக்கப்பட்டதாகும்.
நம் நாடு பெரியது. எந்த முடிவையும் ெசயல்படுத்த காலஅவகாசம் தேவை என்பதால்தான் மக்களை 50 நாட்கள் பொறுமையாக இருக்கக் கூறினேன்'' எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மீது தாக்கு
கடந்த 70 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த அரசுகள் கருப்பு பணத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் ஆட்சியை இழந்துவிட்டது நினைத்து வருத்தப்படுகிறார்கள்.
ரூ.500,ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்த முடிவு மக்களை துன்படுத்த அல்ல, ஏழைமக்களுக்கும், நேர்மையான மக்களுக்கும், விளிம்புநிலையில் இருக்கும் மக்களுக்கும் உதவத்தான்.
ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் மக்கள் அதை தவறாகப் பயன்படுத்தாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஊழல்வாதிகள் மிகவும் தந்திரமாக, உங்களை அனுகி, ரூ.2.5 லட்சத்தை டெபாசிட் செய்து, 6 மாதம் கழித்து திரும்ப கொடுக்கும் போது ரூ.2 லட்சம் மட்டும் கொடுங்கள் என்று கூறுவார்கள். அவர்களை உங்களை பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்கள்.
7 ஆண்டு சிறை
சட்டம் மிகக் கடுமையாக இருக்கிறது. ஊழல்வாதிகள் உங்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு, விசாரணையின் போது தப்பித்துக்கொள்வார்கள். உங்களை அதிகாரிகளிடம் பதில் கூறவைப்பார்கள். இதனால்,தேவையில்லாமல் ஏழைமக்களுக்கு பிரச்சினை ஏற்படும்.

ஜனதன் கணக்கை தவறாகப் பயன்படுத்தினால் அவர்கள் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிகபட்சமாக 7ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வழிசெய்யப்படும் என்று மோடி பேசினார்.
அனைவருக்கும் வீடு
முன்னதாக, கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்கு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்று பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தின் முதல் பகுதி 2019-மார்ச் மாதம் முடியும். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடியாகும்.
