பிரதமர் மோடி ரூபாய் நோட்டு செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பு அவரின் கட்சி தொண்டர் ஒருவருக்கே பாதிப்பாக அமைந்துள்ளது.

அறுவைச் சிகிச்சைக்காக ரூ.11 லட்சத்தை மருத்துவமனையில் செலுத்தியபோது, அதை வாங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.இதனால் சாவின் விளிம்பில் அந்த தொண்டர் தவித்து வருகிறார்.

நகரத் தலைவர்

மத்தியப் பிரதேசம், திம்கார்க் மாவட்டம், லிதோரா நகர பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் ஹரி கிருஷ்ணா குப்தா. இவருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். மகன்கள் டீ, சமோசா கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர் .பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவரான ஹரி கிருஷ்ணாவுக்கு கடந்த 5 மாதமாக கல்லீரல் தொடர்பான நோய் இருந்து வந்துள்ளது.

அறுவை சிகிச்சை

இந்நிலையில், நோயின் தாக்கம் பெரிதாகவே, இம்மாதம் முதல் வாரத்தில், நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவரின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி, ரூ.19 லட்சத்தை கட்டணமாகச் செலுத்தக் கூறினர். இம்மாதம் 13-ந்தேதி ஹரி கிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யவும் டாக்டர்கள் முடிவு செய்து இருந்தனர்.

மோடி அறிவிப்பு

இந்நிலையில், ஹரி கிருஷ்ணாவின் குடும்பத்தினர் , உறவினர்கள் பலரிடம் உதவி கேட்டு, ஏறக்குறைய ரூ.11 லட்சத்தை தயார் செய்தனர். அனைத்தும், ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகப் பெற்றனர். ஆனால், கடந்த 8-ந்த தேதி பிரதமர் மோடி ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஹரி கிருஷ்ணாவின் உறவினர்கள் தாங்கள் கொண்டு வந்த ரூ.11 லட்சத்தை மருத்துவமனையில் செலுத்தினர். ஆனால், அந்த பணத்தை பெற மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்த பணம் செல்லாது என்று என்றும் குடும்பத்தாரிடம் கூறிவிட்டது. இதனால், பாரதிய ஜனதா தலைவர் ஹரி கிருஷ்ணாவுக்கு நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாக, சாவை எதிர்பார்த்து உள்ளார்.

யாரும் உதவவில்லை

இது குறித்து, ஹரி கிருஷ்ணாவின் மகன் அமித் குப்தா கூறுகையில், “ பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பின், மருத்துவமனையில் தந்தைக்கான அறுவைசிகிச்சைக்கு செலுத்திய பணத்தை ஏற்க மறுத்துவிட்டனர். இது தொடர்பாக பா.ஜனதா எம்.பி. திகம்கார் வீரேந்திர காடிக், எம்.எல்.ஏ. கே.கே.ஸ்ரீவஸ்தவா , காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலரிடம் இது தொடர்பாக உதவி கேட்டு, பணத்தை மருத்துவமனை ஏற்கச் சொல்லக் கூறினேன். ஆனால், எந்த முயற்சியும் பலனில்லை. யாரும் உதவ முன்வரவில்லை. இதனால், என் தந்தையின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.'' என்று தெரிவித்தார்.

சோகம்

இந்நிலையில், பணப்பற்றாக்குறை காரணமாக ஹரி கிருஷ்ணாவின் குடும்பத்தினர் தாங்கள் குடியிருக்கும் சொந்த வீட்டையும் விற்பனை செய்ய துணிந்தனர். ஆனால், அதை வாங்க ஒருவரும் முன்வராததால், அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பிரதமர் மோடியின் அறிவிப்பு, அவரின் கட்சித் தொண்டருக்கே ஆப்பாக அமைந்துவிட்டது.