பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
 கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உ.பி.யில் வாரணாசி, குஜராத்தில் வதோதரா என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் அமோக வெற்றி பெற்றார். பின்னர் வாராணசி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு, வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட்டது, உ.பி.யில் அக்கட்சிக்கு செல்வாக்கையும் அதிகரித்தது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இரு பலமுள்ள கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் ஒடிஷாவில் உள்ள புரி தொகுதியிலும் போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் பா.ஜ.கவின் பார்லிமெண்ட் குழு கூட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தேர்தலில் வாரணாசி தொகுதியில் மீண்டும் மோடி போட்டியிட முடிவெடுக்கப்பட்டதாகப் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த முறைபோல இரண்டு இடங்களில் போட்டியிடாமல் வாரணாசியில் மட்டுமே மோடி போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.