கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச அலிகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

பிரசார கூட்டம்

உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வரும் 11-ந்தேதி முதல் ேதர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக மற்றும் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இந்நிலையில், தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அலிகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பாஜக புயல்

உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி என்கிற புயல் காற்று கடுமையாக வீசுகிறது. இதனை இளம் தலைவர் அகிலேஷ் யாதவால் எதிர்கொள்ள முடியவில்லை. அவர் ஊதித் தள்ளப்படுவார். உத்தரப்பிரதேச மக்கள் மாற்றத்தையும், நீதியையும் விரும்புகிறார்கள்.

கடுமையான நடவடிக்கை எடுத்து மக்கள் பணத்தை காப்பாற்றி வருகிறோம். இதனால்தான் காங்கிரசும், சமாஜ்வாதியும் என் மீது கோபம் கொண்டு, எங்கள் கட்சியை வீழ்த்து கூட்டணி அமைத்துள்ளனர்.

காங். அச்சம்

உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற்றால் பாரதிய ஜனதா கட்சியின் பலம் மாநிலங்களவையில் பெருகும். அதனால் கொள்ளையர்கள், ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை எங்களால் நிறைவேற்ற முடியும். இவ்வாறு நடந்து விடக்கூடாது என்கிற அச்சத்தில் காங்கிரசும், சமாஜ்வாதியும் உள்ளன. கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு எதிராக நான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

மின் வசதி

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சியின் போது எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படவில்லை. ஊழல், இனவாதம் ஆகியவைதான் மேலோங்கியது. குறிப்பாக கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை கூட வழங்கப்படாமல் உள்ளது. ஆனால், நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமமும் மின் வசதியை பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இரவு பகலாக உழைக்கிறது. நல்ல வளர்ச்சியை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம். விரைவில் அனைத்து கிராமங்களிலும் மின் வசதி ஏற்பட்டுவிடும் என நம்புகிறேன்.

வேலைக்கு லஞ்சம்

உத்தரப்பிரதேசத்தில் அரசு வேலைக்காக எம்எல்ஏக்களும், மாநில அமைச்சர்களும் லஞ்சம் கேட்கின்றனர். இதற்காக ஏழை மக்கள் தங்களது நிலத்தை அடமானம் வைத்து லஞ்ச பணத்தை செலுத்துகிறார்கள். இந்த அவல நிலை நிறுத்தப்பட வேண்டும். ஓய்வூதியத்தை மத்திய அரசு ஆதார் எண்ணுடன் இணைத்தது. இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் ஓய்வூதியத்திற்கான 40 ஆயிரம் கோடியை ஊழல்வாதிகள் சுரண்டியிருப்பார்கள்.

திட்டம் தயார்

ரூபாய் நோட்டு தடையை கொண்டுவந்த பின்னர், முறைகேடாக பணம் சம்பாதித்தவர்கள் தங்களது பணத்தை வங்கியில் செலுத்தும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். மோடியிடம் கருப்பு பணத்தை ஒழிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் என்னிடம் அதற்கான திட்டம் தயாராக இருப்பது என்பது அவர்களுக்கு தெரியாது. மீட்கப்படும் கருப்பு பணம் வேலைவாய்ப்பு, நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பணிகளுக்கு செலவு செய்யப்படும்.

ரூ.10,000 கோடி

ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் 120 கோடி மக்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறைந்த விலைக்கு எல்.இ.டி. விளக்குகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனால், ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மின் கட்டணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உத்தரப் பிரதேசத்தில்தான் சட்டம் ஒழுங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் சமாஜ்வாதி அரசை இந்த தேர்தலில் மக்கள் வீழ்த்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.