நாட்டில் பரவலாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், மழை நீரை சேகரிக்க வலியுறுத்தி, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

ஒரு பக்கம் கொண்ட அந்த கடிதத்தில், பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் மூலம், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அன்பிற்குரிய பஞ்சாயத்து தலைவர்களுக்கு வணக்கம். நீங்கள், மற்றும் பஞ்சாயத்தில் வசிக்கும் எனது சகோதரர், சகோதரிகள் அனைவரும் நலமாக வசீப்பீர்கள் என நம்புகிறேன். மழைக்காலம் விரைவில் தொடங்க உள்ளது. அதிகளவு மழை தண்ணீர் கிடைக்‍க கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்வோம். இந்த மழை தண்ணீரை சேகரிக்க நாம் அனைத்து முயற்சிகளையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். 

கிராம பஞ்சாயத்துகளை கூட்டி, இந்த கடிதத்தை சத்தமாக படிக்க வேண்டும். மழை நீரை எப்படி சேகரிப்பது என்பது குறித்து பஞ்சாயத்துகளில் விவாதம் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு துளி மழைநீரையும் சேகரிக்க நீங்கள் அனைவரும் தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள் என நான் நம்புகிறேன். மழை நீரை முறையாக சேகரிக்க, தடுப்பணைகள் மற்றும் குளங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த பருவமழையின் போது, கிராம மக்கள், மழை தண்ணீரை சேகரிக்க, கிராம தலைவர்கள் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

வடமாநில கிராம பகுதிகளில், இந்த கடிதம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏராளமான கிராமத்தினர், இந்த கடிதம் குறித்து பேசி வருகின்றனர். பல கிராமங்களில், தண்ணீரை சேமிக்க தேவையான நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.