modi action in black money company
நாட்டில் கருப்பு பணத்தை பதுக்குவோர், அதை மறைக்க உதவி செய்வோருக்கு கடும் தண்டனை கொடுக்க முடிவு செய்துள்ளது. கருப்பு பணத்ைத பதுக்கிவைக்க பயன்படுத்தப்பட்ட ஒரு லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாகப் பேசினார்.
நிறுவனர் நாள்
இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் நிறுவனத்தின் நிறுவனர் நாள் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-
மிகப்பெரிய தூண்கள்
இந்த நாட்டின் மிகப்பெரிய தூண்களாக இருப்பது கணக்குதணிக்கையாளர்கள்தான். நீங்கள்தான் நாட்டின் பொருளாதார நலனை பார்த்துக் கொள்ள வேண்டும். உலக அளவில் உங்களின் அறிவும், நிதித்திறமையும் அனைவராலும் புகழப்படுகிறது. இந்திய பொருளாதாரத்தின் மிகப்பெரிய தூண்கள் கணக்கு தணிக்கையாளர்கள்.
ஒற்றுமை
சர்வதேச தரத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கொண்டு வர வேண்டும். ஜூலை 1-ந்தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தி இருக்கிறோம், இதேநாளில் கணக்கு தணிக்கையாளர்கள் நிறுவனர் நாள் கொண்டாடப்படுகிறது. எப்படி ஒரு ஒற்றுமையாக இருக்கிறது.
இந்த நல்ல நாளில் புதிய படிப்புகளை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இந்த துறையில் படிக்க வரும் மாணவர்களின் திறனை இது மேம்படுத்தும்.
பதிவு ரத்து
நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க என்னுடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கருப்புபணத்தை மறைக்க, துணை புரியும் மனிதர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
கருப்புபணத்தை ஒழிப்பதற்காக ஒரு லட்சம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்து இருக்கிறோம். கருப்புபணத்தை பதுக்க பயன்படுத்தப்பட்ட 33 ஆயிரம் போலி நிறுவனங்களின் கண்டுபிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 லட்சம் நிறுவனங்கள்
ரூபாய் நோட்டு தடை காலத்துக்கு பின், ஏறக்குறைய 3 லட்சம் பதிவு செய்யப்பட்டநிறுவனங்கள், சந்தேகத்துக்கு உரிய வகையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
எச்சரிக்கை
கருப்பு பணம் வைத்து இருப்பவர்களை எச்சரிக்கை செய்கிறேன், யாரையும் சம்மா விடாது இந்த அரசு. இன்னும் 2 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து அரசு கருப்புபணம் வைத்து இருக்கும் இந்தியர்களின் விவரங்களை தானாகவே அளிக்கப்போகிறது. அப்போது கருப்புபணம் வைத்துஇருக்கும் இந்தியர்கள் சிக்கலை சந்திப்பார்கள்.
குறைந்தது
என்னுடைய அரசு கருப்புபணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கையின் காரணமாக, சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் கருப்புபணம் ரூ. 4500 கோடியாகக் குறைந்துவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
