Haryana violence : மணிப்பூர் கலவரமே முடியல.. ஹரியானாவில் ஏற்பட்ட மதக் கலவரம் - உண்மையில் என்ன நடக்கிறது?
ஹரியானா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மதக் கலவரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், 144 தடை மற்றும் இணைய சேவை முடக்கம் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவின் நூஹ்வில் வகுப்புவாத மோதல்கள் நடந்த ஒரு நாள் கழித்து, குருகிராமில் உள்ள பாட்ஷாபூரில் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷங்களுக்கு மத்தியில் உணவகம் மற்றும் கடையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த திங்களன்று ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் ஒரு கும்பல் விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தை தடுக்க முயன்றதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். போலீசார் உட்பட குறைந்தது 70 பேர் காயமடைந்தனர். ஒரு கும்பல் ஊர்வலத்தைத் தாக்கியதால், 2,500 க்கும் மேற்பட்ட மக்கள் நல்ஹர் மகாதேவ் கோவிலுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
மாலை வேளையில், வன்முறை மோசமடைந்தது. நள்ளிரவில், ஒரு மசூதி தீவைக்கப்பட்டது. மேலும் நுஹ் மற்றும் அருகிலுள்ள நகரமான குருகிராம் வழியாக மக்கள் கூட்டம் அலைமோதியதால் பல்வேறு வாகனங்கள் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.
வழிபாட்டு தலங்களை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியை உறுதி செய்வதற்காக இரு சமூகங்களின் முக்கிய உறுப்பினர்களுடன் காவல்துறையும் நிர்வாகமும் கூட்டங்களை நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வகுப்புவாத வன்முறை தொடர்பாக போலீசார் 40 வழக்குகளை பதிவு செய்து 80க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
அதேபோல அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!