மத்திய அரசின் புதிய மசோதா ஜனநாயகத்தின் அடித்தளத்தைத் தகர்க்கும் முயற்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்தால் பதவி நீக்கம் செய்யும் இந்த மசோதாவை சர்வாதிகாரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்த புதிய மசோதா குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவின்படி, பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களில் சிக்கி 30 நாட்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டால், அவர்களை பதவியிலிருந்து நீக்க முடியும். இந்த மசோதா ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் ஒரு முயற்சி என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது:

"ஜனநாயகத்தின் ஆணிவேரையே தாக்கி, இந்தியாவை சர்வாதிகாரத்தில் மூழ்கடிக்க இந்த மசோதா முயற்சிக்கிறது. நாட்டை சர்வாதிகாரத்தின் பிடியில் தள்ளும் நோக்கத்தில் மத்திய அரசு ஜனநாயகத்தின் அடித்தளங்களைத் தகர்க்கிறது. வாக்கு திருட்டு அம்பலமாகியுள்ள நிலையில், பாஜக அரசு சட்டபூர்வமானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அம்பலமான வாக்கு திருட்டு மோசடிகளில் இருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்ப இந்த முயற்சி நடைபெறுகிறது."

Scroll to load tweet…

“அரசியலமைப்புக்கு விரோதமான இந்த மசோதாவை நீதிமன்றங்கள் நிச்சயமாக நிராகரிக்கும். இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விசாரணை இல்லாமல், தண்டனை இல்லாமல் பதவி நீக்கம் செய்வது என்பது பாஜகவின் உத்தரவு. இது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு மசோதா. இது ஜனநாயகத்தின் அடிவேரையே தாக்கும் என்பதால் நான் இதை கடுமையாக கண்டிக்கிறேன். வாக்குகளை திருடுதல், மாநிலங்களை நசுக்குதல் என சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்குகிறது.”

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.