மத்திய வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் அக்பர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகிய பின் தன் மீதான  பாலியல் புகாரை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். ''மீடூ'' ஹேஷ்டேக் மூலம் மத்திய அமைச்சர் ஒருவர் பதவி விலகுவது இந்தியாவில் இதுவே முதல்முறை.

‘மீடூ’ இயக்கம் மூலம் வெளிநாட்டு பத்திரிகையாளர் உள்பட 15-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் மத்திய வெளியுறவுத் துறை  இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதில் பிரியாரமணி, கசாலா வகாப், ஷிமா ரகா, அஞ்சுபாரதி உள்ளிட்ட பிரபல பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் அடங்குவர்.

  

இவர்களது இந்த குற்றச்சாட்டுக்களை மத்திய அமைச்சர் அக்பர் மறுத்தார். மேலும் பதவி விலக முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் தன் மீது பாலியல் குற்றம் சாட்டியிருந்த பெண் மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றையும் தொடுத்திருந்தார். மத்திய அமைச்சர் அக்பர் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி வந்தனர். ஆனாலும், எம்.ஜே.அக்பர், குற்றச்சாட்டு குறித்து மறுப்பு தெரிவித்தும், தன் மீது புகார் கூறிய பெண் மீது வழக்கு தொடுத்தும் இருந்தார்.

 

பதவியில் இருந்து அவர் விலகப்போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறிவந்த நிலையில், அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து விலகி, தன் மீதான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாகவும்  அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடியிடம், மத்திய இணை அமைச்சர் அக்பர் தனது ராஜினமா கடிதத்தை கொடுத்துள்ளார்.