காஷ்மீர் அதன் அழகால் தன்னை திகைக்க வைத்ததாக உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா தெரிவித்துள்ளார்

Miss world எனப்படும் உலக அழகி போட்டியானது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான 71ஆவது உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெறுகிறது. இந்தியாவில் உலக அழகி போட்டியானது ஒரு மாதத்துக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 140 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிகிறது.

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட இந்திய அழகிகள் 6 பேர் இதுவரை உலக அழகி பட்டம் வென்றுள்ளனர். கடைசியாக மானுஷி சில்லார் கடந்த 2017ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் வெற்றி பெற்று, தற்போது போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா உலக அழகியாக உள்ளார்.

இந்த நிலையில், உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா ஒரு நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் வந்துள்ளார். அவருடன், இந்திய அழகி சினி ஷெட்டி, உலக அழகி போட்டிக்கான அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி உள்ளிட்ட பலரும் உடன் சென்றனர். காஷ்மீரின் பாரம்பரிய உடையணிந்து காஷ்மீரின் கண்கொள்ளா இயற்கை காட்சிகளையும், சுற்றுலா தளங்களையும் கண்டுகளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா, காஷ்மீர் அதன் அழகால் தன்னை திகைக்க வைத்ததாக தெரிவித்தார். “நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. காஷ்மீர் அதன் அழகால் என்னை திகைக்க வைக்கிறது. நாங்கள் காஷ்மீரைப் பற்றி பேசியிருக்கிறோம். இங்கு அழகான இயற்கைக்காட்சிகள் இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இன்று நாங்கள் பார்த்தது உண்மையில் மனதைக் கவரும் வகையில் உள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜி20 கூட்டம்: ஜோ பைடன், ஜி ஜின்பிங் தங்கும் சொகுசு ஹோட்டல்கள்!

உலக அழகி போட்டிக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது பற்றி பேசிய அவர், இந்தியாவின் விருந்தோம்பல்தான் இதற்குக் காரணம் என்றார். “இந்திய மக்கள் தங்கள் விருந்தோம்பலுக்கு பிரபலமானவர்கள். அதனை நாங்கள் இன்று உணர்ந்தோம். அவர்கள் எங்களை சிறப்பாக வரவேற்றனர். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. ஆனால், மக்களின் அன்பு ஒரே மாதிரியாக இருக்கிறது. அவர்களின் மனதில் நன்மை மற்றும் கருணை உள்ளது.” என்றார்.

“140 நாடுகளையும் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் இந்தியாவிற்கு அழைத்து வந்து காஷ்மீர், டெல்லி, மும்பை போன்ற இடங்களைக் காண்பிப்பதற்கும் என்னால் காத்திருக்க முடியவில்லை. இந்தியாவுக்கு நான் மூன்றாவது முறையாக வருகிறேன். ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்போம்.” என்றும் உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 2023 உலக அழகிப் போட்டியின் இறுதி சுற்று காஷ்மீரில் நடைபெறவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அதனை உலக அழகி போட்டிகளை நடத்தும் PME Entertainment நிறுவனம் மறுத்துள்ளது. “காஷ்மீரில் உலக அழகி போட்டி 2023 இறுதி சுற்று நடைபெற உள்ளது என்ற செய்தி ஆதாரமற்றது. உலக அழகி அமைப்பின் சார்பில், இந்த தகவலை மறுக்கிறேன். பிஎம்இ என்டர்டெயின்மென்ட் மற்றும் மிஸ் வேர்ல்ட் அமைப்பின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பின்படி, இறுதிப் போட்டிக்கான இடம் இறுதி செய்யப்பட உள்ளது. அதிகாரப்பூர்வமாக அந்த இடம் பின்னர் அறிவிக்கப்படும்.” என்று PME Entertainment நிறுவனத்தின் தலைவர் ஜமீல் சைதி தெரிவித்துள்ளார்.

உலக அழகி போட்டிக்கான அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறுகையில், “உண்மையாக, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காஷ்மீரின் அழகு எங்களை உணர்ச்சிவசப்படுத்துகிறது.” என்றார். உலக அழகி குழுவினர் வருகிற நவம்பர் மாதத்தில் காஷ்மீருக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.