நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஈரான், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்து இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பிய நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஈரான், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்து இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பிய நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசினார். அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக டெல்லி பாஜக செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. மேலும் இந்த கருத்தை கண்டித்து உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. பிரச்சனை அரபு நாடுகளிலும் எதிரொலித்ததால், பாஜகவுக்கு கடும் நெருக்கடியாக அமைந்தது.

இதன் காரணமாக, நேற்று அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பாஜக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதேபோல், நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. இதனைத்தொடர்ந்து பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது என அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனிடையே நபிகள் குறித்த விமர்சனத்திற்கு பாகிஸ்தான், சவுதி அரேபியா, குவைத், பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. மேலும் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வளைகுடா நாடுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

அத்துடன் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்துக்கு உரிய விளக்கமளிக்க இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கிறது. தேவையற்ற மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது. ஒரு மத ஆளுமையை இழிவுபடுத்தும், புண்படுத்தும் ட்வீட்கள் மற்றும் கருத்துக்கள் சில நபர்களால் செய்யப்பட்டன. அவை எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. சம்பந்தப்பட்ட கட்சிகளால் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது.
