வங்கதேசத்தில் நிலவரம் என்ன? மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர்!
பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வருவதற்கு ஒப்புதல் கோரினார். வங்கதேச அதிகாரிகளிடமிருந்து விமான அனுமதிக்கான கோரிக்கை வந்தது. அதற்கு உடனடியாக அனுமதி அளித்ததை அடுத்து திங்கட்கிழமை மாலையில் ஷேக் ஹசீனா டெல்லி வந்தார் என அமைச்சர் எடுத்துரைத்தார்.
வங்கதேசத்தில் நிலவும் பதற்றநிலை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியிருக்கிறார். வங்கதேச அரசியல் ஸ்திரமின்மைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும் பல மாதங்களாக போராட்டம் கைவிடப்படவில்லை என்றும் போராட்டக்காரர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு துறை தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளார். அவர் இந்தியாவுக்கு வருவதற்கு ஒப்புதல் கோரினார். வங்கதேச அதிகாரிகளிடமிருந்து விமான அனுமதிக்கான கோரிக்கை வந்தது. அதற்கு உடனடியாக அனுமதி அளித்ததை அடுத்து திங்கட்கிழமை மாலையில் ஷேக் ஹசீனா டெல்லி வந்தார் என அமைச்சர் எடுத்துரைத்தார்.
எங்கே இருக்கிறார் ஷேக் ஹசீனா? உலகம் முழுவதும் அதிகம் கண்காணிக்கப்பட்ட வங்கதேச ஹெலிகாப்டர்!
பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் இருப்பதை நினைவுகூர்ந்த அமைச்சர், 2024 ஜனவரியில் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, வங்கதேச அரசியலில் பதற்றநிலை வளர்ந்து வந்தது என்றும் அதன் வெளிப்பாடாக ஜூன் மாதத்தில் தொடங்கிய மாணவர் போராட்டம் நிலைமையை மோசமாக்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி வங்கதேசத்தில் நடந்த நிகழ்வுகளை விவரித்த ஜெய்சங்கர், சிறுபான்மையினர், அவர்களது வணிகங்கள் மற்றும் கோவில்கள் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது கவலையளிக்கிறது என்று கூறினார். இருப்பினும், இதன் முழு விவரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறினார்.
வங்கதேசத்தில் நிலைமை இன்னும் மாறிவருகிறது என்றும் அங்கு உள்ள இந்திய சமூகத்துடன் இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக தொடர்பில் உள்ளது எனவும் அவர் கூறினார். அந்நாட்டில் 19,000 இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 9,000 மாணவர்கள் உள்ளனர். இந்திய மாணவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே ஜூலை மாதத்தில் இந்தியா வந்துவிட்டனர் என்று ஜெய்சங்கர் கூறினார்.
யார் இந்த முஜிபுர் ரஹ்மான்? வங்கதேசத்தில் இவரது சிலைகள் உடைக்கப்படுவது ஏன்?