காஷ்மீரில் ராணுவத்தினர் – போலீசார் திடீர் மோதல்

ஜம்மு காஷ்மீரில் போலீசாருக்கும் ராணுவத்துக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் 7 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பெல் மாவட்டத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு தனியார் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

இந்த வீரர்கள் அமர்நாத் யாத்ரீகர்கள் பயணம் செல்லக் கூடிய பல்தால் முகாமில் இருந்து வந்தனர். வீரர்கள் வந்த வாகனம் சோனமார்க் சோதனை சாவடியில் வந்துபோது வாகனங்களை நிறுத்துமாறு போலீசார் உத்தரவிட்டனர்.

இதனை மீறி வாகனங்கள் சென்றன. இதையடுத்து, அருகி்ல் உள்ள சோதனை சாவடியான கண்டுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.

அங்கு வாகனங்களை போலீசார் நிறுத்தினர்.

அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனங்களை ஒரு அடி கூட முன்னே செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, அருகில் உள்ள ராணுவத்தினரை, சோதனை சாவடியில் மறிக்கப்பட்ட வீரர்கள் அழைத்தனர். அவர்கள் வந்ததும், போலீசாரை சரமாரியாக தாக்கி சோதனை சாவடியை சூறையாடினர். இதில் உதவி அய்வாளர் உள்பட போலீசார் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஷ்டிரிய ரைபிள்சின் 24-வது பிரிவு வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்த மூத்த ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.