Military officer wife murder in delhi and another officer arerest in the case
டெல்லி கன்டோன்மெண்ட் எல்லைக்குட்பட்ட பிரார் சதுக்கம் சாலையில் ராணுவ அதிகாரியின் மனைவி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சக ராணுவ மேஜரை போலீசார் மீரட்டில் கைது செய்தனர்.
டெல்லியின் மேற்கு பகுதியில் ராணுவ அதிகாரி அமித் திவிவேதி என்பவர் தனது மனைவி சைலஜா மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.. அமித் திவேதி திமாபூரில் பணியில் உள்ளார், டெல்லிக்கு பயிற்சிக்காக வந்துள்ளார். இவருடைய மனைவி சைலஜா திவிவேதி நேற்று முன்தினம் காலை பிசியோதெரபி’ சிகிச்சைக்காக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு காரில் சென்றார்.

இதையடுத்து அமித் திவிவேதி, மனைவியை தேடி சென்றார். எங்கும் அவர் கிடைக்காததால் உடனடியாக போலீலில் புகார் அளித்தார்.
இதற்கிடையே டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் பெண் பிணம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் பிணமாக கிடந்ததால் அவர் யார் என்று தெரியாமல் போலீசார் குழம்பிப் போயிருந்தனர்.

அந்த நேரத்தில்தான் ராணுவ அதிகாரி தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார், சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை அமித் திவிவேதியிடம் காட்டி விசாரித்தனர். அப்போதுதான் கொலை செய்யப்பட்டது ராணுவ அதிகாரி அமித் திவிவேதியின் மனைவி சைலஜா என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் அமித் திவிவேதியின் நண்பரான மற்றொரு ராணுவ மேஜர் நிகில் ராக்கு சைலஜா கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை தேடியபோது அவர் செல்போனை அணைத்துவிட்டு, தலைமறைவானார்.
இதையடுத்து தொடர் தேடுதல் வேட்டையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் பதுங்கி இருந்த ராணுவ மேஜர் நிகில் ராயை போலீசார் கைது செய்தனர். சைலஜா கொலை தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக் காதல் விவகாரமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
