Militants killed in PCs - Police Action

மத்தியப் பிரதேசத்தில் நடந்த ரெயில் குண்டு வெடிப்பு சதியில் தொடர்புடைய ‘ஐ.எஸ்.’ தீவிரவாதி ஒருவர் லக்னோவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து உஜ்ஜெயினி சென்ற பாசஞ்சர் ரெயிலில் நேற்று முன்தினம் காலையில் குண்டு வெடித்தது. இதில் 8 பயணிகள் காயம் அடைந்தனர்.

ஐ.எஸ். தீவிரவாதி

இந்த குண்டு வெடிப்பில் ‘ஐ.எஸ்.’ இயக்க தீவிரவாதிகளுக்கு தொடர் இருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கான சதித்திட்டத்தில் தொடர்புடைய மொகமத் சைபுல்லா என்பவர், உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

உயிரோடு பிடிக்க..

நேற்று முன்தினம் இரவில் தீவிரவாத தடுப்பு போலீஸ் படையினர், அவர் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து சைபுல்லாவை உயிரோடு பிடிக்க முயன்றனர்.

இதற்காக, கண்ணீர் புகை குண்டுகள், ‘மிளகாய்ப் பொடி’ குண்டுகள் வீட்டுக்குள் வீசப்பட்டன. ஆனால், அவர் வெளியே வராததால், கமாண்டோ வீரர்கள் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்தனர்.

துப்பாக்கிச்சண்டை

அவர்களை நோக்கி சைபுல்லா துப்பாக்கியால் சுட்டதால், கமாண்டோ வீரர்கள் திருப்பித் தாக்கி பதிலடி கொடுத்தனர். இதில் தீவிரவாதி சபியுல்லா சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதன்பின் இரண்டு அறைகளில் போலீசார் தீவிர சோதனை போட்டனர். அப்போது, சுட்டுக்கொல்லப்பட்டது சைபுல்லாதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

12 மணி நேர ஆபரேஷன்

அவரை சுட்டுக்கொன்ற இந்த நடவடிக்கை (ஆபரேஷன்) 12 மணி நேரம் நீடித்தது. ஐ.எஸ்.சின் ‘குரசான்’ பிரிவு இயக்கத்தில் சைபுல்லா தீவிர உறுப்பினராக செயல்பட்டு வந்தான்.

அவருடைய உடலின் வயிற்றுப்பகுதியில் ‘ஒயர்’ சுற்றப்பட்டு இருந்தது. இதன் மூலம் தனது உடலில் வெடிகுண்டை கட்டி வைத்து வெடிக்கச் செய்து இருக்கலாம் என்றும் போலீஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

உ.பி. கூடுதல் போலீஸ் டிஜி.பி. தல்ஜித் சவுத்ரி, தீவிரவாத தடுப்பு படைப்பிரிவு போலீஸ் ஐ.ஜி அசீம் அருண் ஆகியோர் மேற்கண்ட தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்தனர்.

இரு தீவிரவாதிகளா?

முதலில் இரு தீவிரவாதிகள் அந்த வீட்டுக்குள் பதுங்கி இருக்கலாம் என கருதப்பட்டது. அது பற்றி கருத்து தெரிவித்த ஐ.ஜி. அசீம் அருண், ‘டியூப் கேமரா’க்களை பயன்படுத்தியதில் உருவம் தெளிவாக தெரியவில்லை. ஆபரேஷன் முடிந்தபின்னர்தான் ஒருவர் மட்டுமே உள்ளே இருந்தது உறுதி செய்யப்பட்டதாக கூறினார்.

ஒரு துப்பாக்கி கைத்துப்பாக்கி, கத்தி மற்றும் வெடி பொருட்கள் அந்த அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.