அமைச்சர் ஒருவர் ஆபாசமான எஸ்.எம்.எஸ்கள் அனுப்பி தொந்தரவு செய்வதாக பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சரண்ஜித் சிங் சன்னி. ரூபா நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சம்கவுர் தொகுதியின் எம்.எல்.ஏவான இவர் மீது தான் பெண் ஐ.ஏ.எஸ் அதிகார் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். 

தற்போது பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை மீ டூ என்ற ஹேஸ்டேக்கில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது பெயரை குறிப்பிடாமல் அமைச்சர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் கூறியுள்ளார். இரவு நேரத்தில் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாகவும் பல முறை கூறியும் அமைச்சர் மெசேஜ் அனுப்புவதை நிறுத்தவில்லை என்றம் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

 

அமைச்சர் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறியுள்ளார். பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் புகார் வெளியான பிறகு ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் அந்த அமைச்சரின் பெயரை வெளியிட்டு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில் அமைச்சருக்கும் – பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். ஆபாச மெசேஜ் அனுப்பியதற்காக பெண் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்குமாறு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் அமைச்சரின் பெயரை குறிப்பிடாமல் முதலமைச்சர் கொடுத்துள்ள விளக்கத்தை ஏற்க முடியாது என்று எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி பதவி விலக வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன. ஆனால் இது குறித்து பதில் அளிக்காமல் சன்னி மவுனம் காத்து வருகிறார். தற்போது அவர் அரசுமுறைப்பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார்.