முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 12ம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 12ம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எனப்படும் ஒரே சீரான நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2017 ஆம் அண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான முதுகலை நீட் மருத்துவ தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று நடத்தியது. மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அக்டோபர் 9 ஆம் அன்று வெளியானது. இதில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் முதுகலை மாணவர்கள் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். நாடு முழுவதிலும் உள்ள 6,000க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுகலை மருத்துவ இடங்களுக்கு நீட் தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மொத்த சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீடு திட்டத்தின் மூலம் முதுநிலை படிப்புக்கு 50% இடங்களை மத்திய அரசு நிரப்பும் . இந்த, அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி, அன்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மேல் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டில், வருமான வரம்பு தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. மத்திய அரசு சார்பில் வருமான வரம்பு எட்டு லட்சம் என்பதை மறுபரிசீலனை செய்யத் தயார் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்த விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வைத் தொடங்க அனுமதி கோரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மேல் வகுப்பினருக்கு 10 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்குவதை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. மேலும், 10 சதவிகித ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை இந்தக் கல்வியாண்டில் மட்டும் கடைப்பிடித்து கலந்தாய்வை மேற்கொள்ளலாம் என்றும், வரும் மார்ச் மாதம் இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள். இந்த வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், முதுகலை மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதர 50% இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசு நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
