KS Eshwarappa: ஸ்பீக்கர் இல்லாமல் அல்லாவுக்குக் காது கேட்காதா? பாஜக முன்னாள் அமைச்சரின் சர்ச்சை பேச்சு
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே. எஸ். ஈஸ்வரப்பா பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அருகில் உள்ள மசூதியில் தொழுகை நடக்கும் சத்தத்தைக் கேட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
கர்நாடக பாஜக தலைவர் ஒருவர் மசூதியில் நடைபெறும் தொழுகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அல்லாவை அழைக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்த வேண்டும் என்றால் அல்லா காது கேளாதவரா? எனப் பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே. எஸ். ஈஸ்வரப்பா பொதுக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அருகில் உள்ள மசூதியில் இருந்து தொழுகை நடைபெறும் சத்தம் கேட்டது. "நான் எங்கு சென்றாலும், இது எனக்குத் தலைவலியாக இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர உள்ளது. இன்று இல்லாவிட்டாலும் விரைவில் இதற்கு முடிவுக்கட்டப்படும்" என்று ஈஸ்வரப்பா கூறினார்.
The Elephant Whisperers: ஆஸ்கர் வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகள் மாயம்!
ஒலிபெருக்கி வைத்து அழைத்தால்தான் அல்லா பிரார்த்தனையைக் கேட்பாரா என்று கேள்வி எழுப்பிய அவர், "நம் கோவில்களில் கூட பிரார்த்தனையும் பஜனையும் செய்கிறார்கள். நாங்களும் மதத்தில் பற்று கொண்டவர்கள்தான். ஆனால் நாங்கள் இப்படி ஸ்பீக்கரை பயன்படுத்துவதில்லை. லவுட் ஸ்பீக்கரை பயன்படுத்திதான் பிரார்த்தனை செய்யவேண்டும் என்றால், அல்லாஹ் செவிடன் என்று அர்த்தம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வராகவும் பணியாற்றிய ஈஸ்வரப்பாவுக்கு சர்ச்சைகள் புதிதல்ல. இதற்கு முன் 18ஆம் நூற்றாண்டின் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானை "முஸ்லீம் குண்டா" என்று குறிப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். கடந்த ஆண்டு கான்ட்ராக்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்தபோது தன் மரணத்திற்கு 'முழுமையான பொறுப்பு' என்று ஈஷ்வரப்பா பெயரைக் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது.
இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தும்போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்று ஒரு பிரிவினர் வாதிடுகின்றனர். இந்த விவகாரம் நீண்ட காலமாக தீவிர விவாதத்திற்கு உட்பட்டு வருகிறது. 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஒலி மாசுபாட்டால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைக் காரணம் காட்டி, அவசரகால தேவைகள் தவிர்த்து, மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் பின்னர் அதே ஆண்டு அக்டோபரில், பண்டிகை காலங்களில், அதுவும் ஆண்டுக்கு மொத்தம் 15 நாட்களுக்கு மட்டும், நள்ளிரவு வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.
தொழுகையின்போது ஓதப்படும் வாசகங்களின் உள்ளடக்கம் பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், மசூதிகளுக்கு எந்த நிபந்தனையையும் விதிக்க மறுத்ததுடன், சகிப்புத்தன்மை நமது அரசியலமைப்பின் பண்பு என்றும் சுட்டிக்காட்டியது. அத்துடன், மசூதியில் நடைபெறும் தொழுகைகள் மற்ற மதத்தினரின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்ற வாதத்தையும் கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை.