Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வு முடிவுகள்: சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் 9 மாநில மாணவர்கள்!

நாட்டின் சிறந்த மருத்துவ கல்லூரிகளில் சேரவுள்ள 70 சதவீத மாணவர்கள் 9 மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்

MBBS students in top medical colleges are from nine states
Author
First Published Jun 20, 2023, 11:08 AM IST

நடப்பாண்டில் நாட்டின் சிறந்த மருத்துவ கல்லூரிகளில் சேரவுள்ள 70 சதவீத மாணவர்கள் 9 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. நீட் இளங்கலை 2023 மதிப்பெண்கள் வரம்பு தரவுகளின்படி, 400 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற 65 சதவீத மாணவர்கள் பீகார், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய எட்டு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். 620 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.

நீட் தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்ற ஒருவருக்கு பொது மற்றும் ஒபிசி பிரிவுகளில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது கடினம் என்றாலும் கூட,  620 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் 66 சதவீதம் பேர் இந்த மாநிலங்களை சேந்தவர்களாக உள்ளனர்.

கடந்த மே மாதம் 13ஆம் தேதி நீட் இளங்கலை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், மொத்தம் 11.4 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றவர்கள். நீட் தேர்வு முடிவுகளின்படி, 400 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2.3 லட்சமாக உள்ளது. 500-619 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 45,000 க்கும் அதிகமாக உள்ளது நடப்பாண்டு தேர்வில் 620 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 18,757 ஆக உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 54,278 இடங்கள் உள்பட இந்த ஆண்டு ,04,333 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. பிடிஎஸ் படிப்புக்கு 27,868 இடங்கள் உள்ளன. இது தவிர, ஆயுஷ் படிப்புகளுக்கு 52,720 இடங்களும், இளங்கலை கால்நடை அறிவியல், கால்நடை வளர்ப்பு படிப்புகளுக்கு 603 இடங்கள் உள்ளன. ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளும் நீட் தேர்வின் அடிப்படையில்தான் நடைபெறவுள்ளது.

வியட்நாமுக்கு போர் கப்பலை பரிசாக வழங்கும் இந்தியா!

400 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 12.3 சதவீதம் பேர் 400 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, உத்தரப் பிரதேச மாணவர்கள் 11.8 சதவீதம் பேர் உள்ளனர். பீகார், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 64.3 சதவீதம் பேர் 400 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மொத்தம் 322 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 5,200 க்கும் அதிகமான இடங்கள் தமிழகத்தில் உள்ளன. அதனைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,800 இடங்களுக்கு மேல் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 4,300 இடங்கள் உள்ளன. குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 3,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு பிரிவுகளின் கீழ் இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதன்படி, 15 சதவீதம் அனைத்திந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், மீதமுள்ளவை மாநில ஒதுக்கீட்டின் கீழும் நிரப்பப்படுகின்றன.

நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளின்படி, 550 மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 64,520 ஆக உள்ளது. அதில் பெரும்பாலான மாணவர்கள் டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். ராஜஸ்தானில் மட்டும் அதிகமாக இந்த எண்ணிக்கை 16.8 சதவீதமாக உள்ளது. அதனைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேசம் 12.2 சதவீதம், மகாராஷ்டிரா 8.4 சதவீதமாக உள்ளது. 619 வரையிலான மதிப்பெண் வரம்பில் பீகார் முதல் எட்டு இடங்களுக்குள் உள்ளது. 620 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் வரம்பில், 7.2 சதவீதத்துடன் டெல்லி முதலிடத்தில் உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios