24 ஆண்டுகளுக்குப் பின் மாயாவதியும்-முலாயம் சிங் யாதவும் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் பரம எதிரிகளாக இருந்து வந்த சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும்  இதற்கு முந்தைய பல சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்தனியே போட்டியிட்டன. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனியாக போட்டியிட்டதால் அது பாரதீய ஜனதாவுக்கு வாய்ப்பாக அமைந்தது. அங்கு பா.ஜ.க. பெரும் வெற்றியை பெற்று ஆட்சியை அமைத்தது. 

அதேபோல் 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிக்குமே பொது எதிரியாக பாரதீய ஜனதா உள்ளது. எனவே பாரதீய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இரு கட்சிகளும் இப்போது அங்கு கூட்டணி அமைத்துள்ளன. 

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 1995-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தை ஆண்ட சமாஜ்வாதிக் கட்சி அரசுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்று பாஜகவுடன் கைகோர்த்ததால் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த சமாஜ்வாதிக் கட்சியினர் மாயாவதி இருந்த விருந்தினர் மாளிகைக்குள் புகுந்த அவரைக் கடுமையாக வசைபாடி தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இந்த கசப்பான சம்பவத்துக்கு பிறகு இருக்கட்சிகளும் ஒன்றையொன்று எதிர்த்தே போட்டியிட்டு வந்தன. இதனையடுத்து  24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாஜகவுக்கு எதிராக இருகட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.