கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ மகேஷை கட்சியிலிருந்து நீக்குவதாக மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து, கூட்டணி அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

இந்நிலையில், நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு குறித்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் அறிவித்தார். முதலில் குரல் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு இரவு 7.40 மணிக்கு நிறைவடைந்தது. இதன் முடிவில், குமாரசாமி தீர்மானத்திற்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவிட்ட நிலையில் எம்.எல்.ஏ. என்.மகேஷ் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத பகுஜன் சமாஜ் எம்எல்ஏ என்.மகேஷ் கட்சியிலிருந்து நீக்குவதாக மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார்.