மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்ப பெற வேண்டிய சூழல் ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், சுயேட்சைகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வராக கமல்நாத் இருந்துவருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய பிரதேச மாநிலத்தில் குணா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் லோகேந்திர சிங் ராஜ்புத் அறிவிக்கப்பட்டார்.  ஆனால், வேட்பாளராக அவர் அறிவிக்க அடுத்த நாளே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். காங்கிரஸில் அவர் சேர்ந்த புகைப்படத்தை ட்விட்டரில் சிந்தியாவுடன் வெளியிட்டார்.


இதனால் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் அதிருப்தி அடைந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அரசு இயந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதில் காங்கிரஸூம் பாஜகவும் சளைத்ததில்லை. குணா மக்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மிரட்டி காங்கிரஸில் சேர வைத்துள்ளார்கள். இதற்காக நான் பயப்படமாட்டேன். மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்.” என்று தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் மாயாவதி ஆதரவை விலக்கிக்கொண்டால், காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும்.