Mayavathi statement
வாக்குப்பதிவு எந்திரத்தில் ‘தில்லு முல்லு’:....புலம்புகிறார் மாயாவதி
‘‘நம்ப முடியாத உ.பி., உத்தரகாண்ட் தேர்தல் முடிவு அதிர்ச்சி அளிப்பதாகவும், வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்து பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பதாகவும், மாயாவதி ஆவேசமாக குற்றம்சாட்டினார். வாக்குச் சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று தேர்தல் முடிவு ெவளியாகிக்கொண்டு இருந்தபோதே, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அவசர அவசரமாக நிருபர்கள் கூட்டத்தை கூட்டி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
அதிர்ச்சி, ஆச்சரியம்
“தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கிறது, நம்ப முடியவில்லை, ஆச்சரியமாக இருக்கிறது. பா.ஜனதா கட்சி, தனக்கு சாதகமாக ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ‘தில்லு முல்லு’ செய்துள்ளது.
எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அவ்வாக்கு பாஜக-வுக்கே சென்றது போல் தெரிகிறது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நாடாளுமன்ற தேர்தலிலும்...
பாஜக ஜனநாயகக் கொலை செய்துள்ளது. அக்கட்சியின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போதும் இதே போன்ற புகாரை எங்கள் கட்சித் தொண்டர்கள் என்னிடம் கூறினார்கள்.
ஆனால், அதைப் பொருட்படுத்தாத நான், ‘‘மோடிக்கு எதிரான அலை’ மற்றும் ‘‘காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வு’’ காரணமாக இருக்கலாம் என்று கருதி அமைதியாக இருந்துவிட்டேன்.
மீண்டும் தேர்தல்
உத்தரப்பிரதேசத்தில் 20 சதவீத முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பது நம்ப முடியாததாக உள்ளது. இது குறித்து நான் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன்.
தேர்தல் முடிவை அதிகாரபூர்வமாக அறிவிப்பதை நிறுத்தி வைத்து, வாக்குச்சிட்டு முறைப்படி மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறேன். அதற்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திர தில்லு முல்லு குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருக்கிறேன்’’.
இவ்வாறு மாயாவதி கூறினார்.
பா.ஜனதாவுக்கு சவால்
அவர் மேலும் கூறுகையில், வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா? என, பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு மாயாவதி சவால் விடுத்தார்.
‘‘இந்த வெற்றி குறித்து பா.ஜனதா கட்சி மகிழ்ச்சி அடையத் தேவையில்லை என்று கூறிய மாயாவதி, ‘‘இந்தத் தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகப் படுகொலை’’ என்றும் வர்ணித்தார்.
