மாதா அமிர்தானந்தமயி தொண்டு நிறுவனம் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகளை தேனி மாவட்டத்தில் கொட்டி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால், மருத்துவக் கழிவுகள், கோழிக் கழிவுகள் மட்டுமல்ல, சாதாரண இளநீர் கூடுகளைக் கூட வெறுமனே தெருவில் போட முடியாது. அதையும் மீறி கழிவுகளை முறையாக கையாளாவிட்டால், கடும் அபராதம் விதிக்கப்படும்.

தூய்மை மற்றும் நோய் தடுப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரளா, தமிழகத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு சரக்கு வாகனங்களையும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கிறது. ஆனால், தமிழகமோ, கேரளாவின் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது. இங்கிருந்து செல்லும் சரக்கு வாகனங்களை கேரள காவல்துறையினர் கடும் சோதனை செய்யும் நிலையில், அங்கிருந்து வரும் லாரிகளில் காசு வாங்குவதை மட்டுமே இங்குள்ள காவல்துறையினர் குறியாக வைத்துள்ளனர்.

இதன் காரணமாகவே, கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகள், தொழிற்சாலை மற்றும் ரசாயனக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் என அனைத்தும், தமிழக எல்லையோரங்களில் கொட்டப்படுகின்றன. கோவை தொடங்கி, தேனி மாவட்டம் வரை பல்வேறு இடங்களில் கேரளாவில் கழிவுகள் கொட்டப்படுவதால், எல்லையோர மக்கள் கடும் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நிலை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த நிலையில்தான், தேனி மாவட்டம் குச்சனூரில் மாதா அமிர்தானந்தமயி தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான தோட்டத்தில் பல டன் அளவில் மருத்துவக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் மருத்துவமனை நடத்தி வரும் மாதா அமிர்தானந்தமயி தொண்டு நிறுவனம், மருத்துவக் கழிவுகளை விதிகளுக்கு உட்பட்டு, முறையாக அகற்றாமல், அவற்றை கேரளாவில் இருந்து கடத்தி வந்து, குச்சனூரில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கொட்டி வைத்துள்ளது.

காலாவதியான மருந்துகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்துகள், நோயாளிகளுக்கு பயன்படுத்திய பல்வேறு உபகரணங்களையும் கொட்டிவைத்துள்ளதால், துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் நிர்வாக அதிகாரிகள், மருத்துவக் கழிவுகளை ஆய்வு செய்தனர்.

தோட்டத்தில் கொட்டிவைக்கப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அண்மையில்தான் கொட்டப்பட்டது தெரியவந்த நிலையில், ஏற்கெனவே இதுபோன்ற முறைகேடுகளில் மாதா அமிர்தானந்தமயி தொண்டு நிறுவனம் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அந்த தோட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட டன் கணக்கிலான மருத்துவக் கழிவுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

எனவே, தோட்டத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அங்கு தற்போது கொட்டிவைக்கப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கே அனுப்புவதுடன், மாதா அமிர்தானந்தமயி தொண்டு நிறுவனம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.