3 மீ தொலைவில் பள்ளத்தைக் கவனித்து, வேறு பாதையில் நகர்ந்த பிரக்யான் ரோவர்!
சந்திரயான்-3 இன் பிரக்யான் ரோவர் மூன்று மீட்டர் தொலைவில் இருந்த பள்ளத்தை முன்கூட்டியே கவனித்து, அதில் விழுந்துவிடாமல் பாதுகாப்பான புதிய பாதையில் திரும்பி பயணிக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய பள்ளத்தை நேருக்கு நேர் சந்தித்து, ஜாக்கிரதையாக வேறு பாதையில் திரும்பிச் சென்றது என இஸ்ரோ கூறியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திங்கள்கிழமை பிற்பகல் சந்திரயான்-3 குறித்த புதிய அப்டேட்டை ட்வீட் செய்தது. சந்திரயான்-3 இன் பிரக்யான் ரோவர் மூன்று மீட்டர் தொலைவில் இருந்த பள்ளத்தை முன்கூட்டியே கவனித்து, அதில் விழுந்துவிடாமல் பாதுகாப்பான புதிய பாதையில் திரும்பி பயணிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் ஆறு சக்கரங்கள் கொண்ட ஊர்தியான ரோவர், இரண்டு வார காலம் நிலவில் வலம் வந்து ஆய்வுகள் மேற்கொள்கிறது. வினாடிக்கு ஒரு செ.மீ. வேகத்தில் நகரும் இந்த ரோவர் நிலவின் படங்கள் மற்றும் அறிவியல் தரவுகளை பூமிக்கு அனுப்புகிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவர் மூலம் நிலவின் தென் துருவத்தில் அதிகபட்ச தூரம் பயணிக்க முயற்சி செய்கிறார்கள். இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், சந்திரயான்-3 இன் பிரக்யான் ரோவர், நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என விண்வெளி பயன்பாட்டு மையத்தின் (எஸ்ஏசி) இயக்குனர் நிலேஷ் எம் தேசாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1! செப். 2ஆம் தேதி ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பு!
— ISRO (@isro) August 28, 2023
நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம், பிரக்யான் ரோவரின் இயக்கம் மற்றும் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் மூலம் அறிவியல் தரவுகளைப் பெறுதல் ஆகியவை சந்திரயான்-3 நிலவுப் பயணத்தின் மூன்று முக்கிய நோக்கங்கள் ஆகும். இதில், இரண்டு நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது. மூன்றாவது நோக்கம் நோக்கமான அறிவியல் ஆய்வுகள் நடந்துவருகின்றன.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, சந்திரயான்-3 லேண்டர் தொகுதி அதன் சோதனைகளில் வெற்றிகரமாகச் செய்யத் தொடங்கியுள்ளதாகவும், அது குறித்த தகவல்களை பின்னர் வெளியிடுவதாகவும் இஸ்ரோ கூறியது.
சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE பேலோட் மூலம் அளவிடப்பட்ட நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாட்டின் வரைபடத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டரில் உள்ள பேலோட் நிலவின் மேற்பரப்புக்கு 10 செமீ ஆழம் வரை மட்டுமே ஆராயும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 லேண்டர் தொகுதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற சாதனையை இந்தியா தன்வசப்படுத்தியது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறக்கம் செய்த நான்காவது நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.