Massive campaign to keep Sabarimala child labour free
கேரளாவில் சபரிமலை சீசனின் போது, குழந்தை தொழிலாளர்களை கடை உரிமையாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடுக்கும் வகையில் 3 மாத ஆப்ரேஷனை கேரள அரசு தொடங்க உள்ளது.
சபரிமலை
பத்திணம்திட்டா மாவட்டத்தில், புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் விரதமிருந்து, மாலை அணிந்து தரிசனம் செய்ய வருவார்கள்.
குழந்தை தொழிலாளர்கள்
இந்த சீசன் நேரத்தில் சிறு குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் கடைக்காரர்கள் அவர்களைப் பயன்படுத்தி பொம்மைகள், வளையல்கள் , சிறு பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.
சபரிமலையில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்த தடை இருக்கும் நிலையில், தமிழகம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திராவில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்து இடைத் தரகர்கள் இந்த பணியில் ஈடுபடுத்துகிறார்கள். குறிப்பாக ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளின் குடும்பத்துக்கு ஒரு தொகையை கொடுத்துவிட்டு, சபரிமலைக்கு அழைத்து வந்து பொருட்கள் விற்பனைக்கு இடைத் தரகர்கள் பயன்படுத்துகின்றனர்.
3 மாத ஆப்ரேஷன்
இந்த ஆண்டு சீசன் முதல் இதை தடுக்க கேரள அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ‘ ஆப்ரேஷன் சரணாபால்யம்’ எனும் திட்டத்தை நவம்பர் 15-முதல் 3 மாதங்களுக்கு செயல்படுத்த உள்ளனர்.
3 முதல் 12 வயது
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரி நீது விமல் கூறியதாவது-
சபரிமலைப் பகுதியில் உள்ள லகா, கானமலை, நிலக்கல், பம்பா ஆகிய பகுதிகளில்தான் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 3 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அதிக அளவில் வளையல்கள், பொம்மைகள், சிறு பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதில் பெண் குழந்தைகளும் அதிகமாக இருக்கிறார்கள்.
உணவு, தங்குமிடம் இல்லை
சிறு குழந்தைகள் பொருட்கள் விற்கும்போது, பக்தர்கள் இரக்கப்பட்டு அதிகமாக வாங்குவார்கள் என்பதால் அதைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் குழந்தைகளை அதிகமாக ஈடுபடுத்துகிறார்கள். சில கடைக்காரர்கள் தங்களின் தூரத்து உறவினர்களின் குழந்தைகளையும் அங்கு அழைத்து வந்து விற்பனைக்கு பயன்படுத்துகிறார்கள். அந்த குழந்தைகள் யார்?, எங்கிருந்து வருகிறார்கள்? என்பது குறித்த அடையாள அட்டை, ஆவணங்கள்கூட இல்லை.
சாலை ஓரம் அமைக்கப்பட்ட சிறு குடில்களில் தங்க வைக்கப்படும் குழந்தைகளுக்கு முறையாக உணவு தரப்படுவதில்லை என்றும், சில நேரங்களில் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் புகார்கள் வந்துள்ளன. இந்த குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்ல, உணவும், தங்குமிடமும் கொடுக்கப்படுவதில்லை.
விழிப்புணர்வு
நாங்கள் மேற்கொள்ளும் ஆப்ரேஷன் மூலம், போலீசார், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளின் உதவியுடன், சபரிமலைப் பகுதிகளில் திடீரென ஆய்வுகள் நடத்தி, குழந்தைகள் தொழிலாளர்கள் ஈடுபடுத்துவது தடுக்கப்படும். மேலும், சபரிமலையில் பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் விழிப்புணர்வு குறித்த விளம்பர பலகைகள், நோட்டீஸ்கள், சிறுநோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
