புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். இதில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, புல்வாமா மாவட்டம் பிங்லான் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த துணைபுரிந்தவர்களாக இருக்கலாம் என ராணுவத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காஷ்மீர் மாநில போலீஸாரும், ராணுவத்தில் 55 ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவினரும் இணைந்து இன்று அதிகாலை பிங்லான் கிராமத்தைச் சுற்றி வளைத்தனர்.

ராணுவத்தினர், போலீஸார் சுற்றி வளைத்தது அறிந்ததும், தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதற்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதியில் ஒருவர் ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பின் முக்கிய கமாண்டரும், மசூத் ஆசாரின் நெருங்கிய கூட்டாளியுமான கம்ரான் என தெரிய வந்துள்ளது. தாக்குதல் திட்டத்தை வடிவமைப்பதிலும், அதனை துல்லயமாக அரங்கேற்றுவதிலும் கம்ரான் மிக முக்கியமான நபர் ஆவார்.


புல்வாமா தாக்குதல் சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதுடன், சதி திட்டத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்டது கம்ரான் என தெரிய வந்துள்ளது.

தற்கொலைப்படை தீவிரவாதி ஆதிலை தேர்வு செய்து பயிற்சி அளித்து தாக்குதலை அரங்கேற்றியுள்ள விவரம் தெரிய வந்துள்ளது.இந்த தாக்குதலின்போது, மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவரது பெயர் ஹிலால் அகமது என தெரிய வந்துள்ளது.