கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் பரவி மீண்டும் மக்களை அச்சுறுத்தி வந்தது. பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளால் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே அஸ்திரம் தடுப்பூசி மட்டுமே என்ற நிலை இருப்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பூஸ்டர் டோஸும் செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறைந்தது. இதன் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன், நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் தினசரி பாதிப்பும் உயர்ந்துள்ளது.

சுமார் ஆயிரத்திற்கு கீழே பதிவாகி வந்த கொரோனா தினசரி பாதிப்பு தற்போது இரண்டு ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் மக்கள் இடையே அச்சம் நிலவி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உத்தர பிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகர், காசியாபாத், ஹாபூர், மீரட், புலந்த்ஷாஹர், பாக்பத் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக உத்தர பிரதேச மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
