நாட்டில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால், நாட்டில் பதுங்கியுள்ள கருப்பு பணம் முழுமையாக வெளிவந்துவிடாது. கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருகிறோம் என்று கூறிக்கொண்டு, அரசியல் ஆதாயம் தேடும் மோடியின் முயற்சி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
நாட்டில் உள்ள கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுக்களையும் ஒழிக்கும் நோக்கில், ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே பெரும் பதற்றத்தையும், பீதியையும் உண்டாக்கியுள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது
நாட்டில் புழக்கத்தில் உள்ள 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம், அவர் நினைத்ததுபோல், கருப்பு பணத்தை முழுமையாக வெளிக்கொண்டு வந்துவிட முடியாது. இந்த நடவடிக்ைக ஓரளவுக்கு மட்டுமே பலனளிக்கும். கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருகிறோம் என்ற அறிவிப்பை அரசியல் ரீதியாக மோடி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதையே காட்டுகிறது.

இந்த நடவடிக்கை மூலம் கருப்பு பணத்தை தடுத்துவிடலாம், போலி ரூபாய் நோட்டுக்களை அழித்துவிடலாம், ஊழலை ஒழித்துவிடலாம், தீவிரவாதத்துக்கு துணை போகிறவர்களை தடுக்கமுடியும் என அரசு நம்புகிறது. ஆனால், வெளிநாடுகளில் வெளிநாட்டு கரன்சிகளாக கருப்புப் பணம் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடியே ஏற்றுக்கொண்டுள்ளார்.
போலி ரூபாய் நோட்டுக்கள் எந்த விடிவத்திலும், எந்த ரூபாய் மதிப்பிலும் வரலாம். புதிதாக அறிவிக்கப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுக்கள் எதிர்காலத்தில் எந்த விதத்திலும் போலி ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தை தடுத்துவிடாது. அப்படி போலி ரூபாய் நோட்டுக்களை தடுக்கிறோம் என்பது மிகைப்படுத்தப்பட்ட உண்மை. தீவிரவாதிகளுக்கு தேவையான நிதியுதவி, ரொக்கப்பணமாக செல்ல வேண்டியது அவசியமில்லை, அது மின்னனு பரிமாற்றமாகவும் அனுப்ப முடியும்.
இந்த ரூ.1000, மற்றும் ரூ.500 நோட்டுக்களை மாற்றுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச காலக்கெடு, பினாமி மூலம் பரிவர்த்தனைகளை எந்த வகையிலும் தடுக்காது.

பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்பு, சாமானிய மக்களான கூலிவேலை பார்ப்பவர்கள், மீனவர்கள், சிறு வணிகம் செய்பவர்கள், சாலை ஓரக் கடை வைத்திருப்பவர்கள், வர்த்தகர்கள், வீடுகளில் சென்று காய்கறிகள், பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு பெரிய சுமையாக அமைந்துவிட்டது. அவர்களின் அன்றாட தொழிலையும், வர்த்தகத்தையும் ஒட்டுமொத்தமாக முடக்கிவிட்டது.
அதே சமயம், பங்குச்சந்தைகளில் பங்கேற்பு ஆவணங்கள், மற்றும் பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்களை எந்த விதத்திலும் இந்த அறிவிப்பு பாதிக்கும் என தெரியவில்லை. கருப்பு பணத்தின் ஆணிவேரை முறிக்கும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையை எந்தவிதத்திலும் இது பாதிக்கவில்லை.

பிரதமர் மோடி அரசின் ஒட்டுமொத்த தோல்விகளான விலைவாசி உயர்வு, உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்காமை, பொருளாதார வளர்ச்சி இல்லாதது, வேலையின்மை, குறிப்பாக உழைக்கும் வர்க்கம் பின்னடைவு ஆகியவற்றை மூடி மறைக்கும் முயற்சியாகப் பார்க்கிறோம்.
உண்மையிலேயே கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருகிறோம் என்றால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.11 லட்சம் கோடிக்கு கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள், வரிஏய்ப்பாளர்கள் ஆகியோரின் பெயர்களை பொதுப்படையாக வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
