நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நேரத்தில் திருமணம் வைத்தால், மொய்பணம் குறைவாக வந்துவிடும், திருமணத்துக்கு செலவிட போதுமான பணம் கிடைக்காது உள்ளிட்ட பல்வேறு அச்சம் காரணமாக வட மாநிலங்களில் ஏராளமான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு, தள்ளிப்போடப்பட்டுள்ளன.
அதாவது, டிசம்பர் மாதம் வரை நடக்க இருந்த திருமணங்கள் பல குறித்ததேதியில் நடத்தாமல், தள்ளிப்போடப்பட்டுள்ளது.

இது குறித்து மும்பையைச் சேர்ந்த ரீத்தாகுப்தா கூறுகையில், “ என்னுடைய தோழி ஒரு மார்வாடி பெண். அவளுக்கு அடுத்த சில வாரங்களில் திருமணம் நடக்க இருந்தது. மார்வாடி குடும்பங்களில் திருமணச்சடங்கு என்பது 18 நாட்கள் வரை நடக்கும். ஒவ்வொரு நாளிலும் உறவினர்கள் வந்து மணப்பெண்ணுக்கு நலுங்குவைத்து பரிசுகள் அளிப்பார்கள். இதில் லட்சக்கணக்கில் பரிசாகக் பெண் வீட்டாருக்கு கிடைக்கும். அதையே திருமணச் செலவாகவும் சிலர் பயன்படுத்திக்கொள்வார்கள்.

ஆனால், சமீபத்தில் மத்திய அரசு 1000, 500ரூபாய் நோட்டுக்களை செல்லாது எனஅ றிவித்ததில் இருந்து திருமணத்தை தள்ளிவைக்கக் கோரி உறவினர்கள் நெருக்கடி கொடுத்துவந்தனர். குறித்தநாளில் திருமணம் வைத்தால், முறைப்படி செய்முறை, பரிசுகள் கொடுக்க இயலாது எனக் கூறினர். இதனால், வேறு வழியின்றி எனது தோழியின் திருமணத்தை 2மாதம் கழித்துஅடுத்த ஆண்டுஜனவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
ஆயிரம், 500 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிப்பால், இந்த மார்வாடிப் பெண் மட்டுமல்ல, மும்பை, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் நடக்க இருந்த பல திருமணங்கள் ஒத்திபோடப்பட்டுள்ளன, சில திருமணங்கள் ரத்துசெய்யப்பட்டு பின்னர் தேதி முடிவு செய்யலாம் என உறவினர்களுக்குள் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தை நடத்திக்கொடுக்கும் நிறுவனம் நடத்தி வரும் அலோக் மேத்தா என்பவர் கூறுகையில், “ அடுத்த ஒரு மாதத்துக்கு திருமணம் நடத்திவைக்கும் நிகழ்ச்சிகள் பல ரத்து செய்யப்பட்டுவிட்டன. காரணம் கேட்டால், 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துவிட்டதால், எங்களால் திருமணச் செலவுக்கு பணம் புரட்ட முடியாது என்றும், திருமணத்தன்று மொய்ப்பணம் எதிர்பார்த்த அளவு வராது, பரிசுப்பொருட்கள் வராது எனக்கூறி திருமணத்தை தள்ளிவைத்துவிட்டனர்.” என்று தெரிவித்தார்.
ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையும்,பாதிப்படைந்துள்ளதோடு, இதுபோன்ள திருமணம், சுபநிகழ்ச்சிகளும் தள்ளிப்போட வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
