மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால், பல கோடி இருப்பு வைத்துள்ள மவோயிடுகள் அதிச்சியடைந்துள்ளனர்.

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கார் மாநிலத்தில் அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதலில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு தேவையான 500 மற்றும் 1000 நோட்டுகளை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையொட்டி பஸ்தர் மண்டலத்தில் உள்ள மாவோயிஸ்டுகள் மட்டும் 500 மற்றும் 1000 நோட்டுகளாக ரூ.7,000 கோடி வரை பதுக்கி வைத்திருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவோயிஸ்டு தடுப்பு சிறப்பு டிஜிபி அவஸ்தி கூறுகையில், ‘‘பஸ்தர் மண்டலத்தில் உள்ள மாவோயிஸ்டுகள் மட்டும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ரூ.7,000 கோடிக்கு பதுக்கி வைத்துள்ளனர். அவை செல்லாது என்ற அறிவிப்பு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நோட்டுகளை மாற்ற மாவோயிஸ்டுகள் தங்களது ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்கள் மூலம் முயற்சி எடுத்து வருகிறார்கள். அந்த பகுதிகளில் பண நடமாட்டத்தை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

மத்திய அரசின் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மாவோயிஸ்டு இயக்கத்தினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.