ராணுவ சீருடை அணிந்து பாஜக டெல்லி தலைவர் மனோஜ் திவாரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கான வியூகம் வகுத்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் பிரச்சார யுக்தியாக பைக் பயணத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தை அமித்ஷா தொடங்கிவைத்த இந்த பேரணி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற்ற இந்த இரு சக்கர வாகனப் பேரணியை பா.ஜ.க மக்களவை உறுப்பினரும் டெல்லி பா.ஜ.க தலைவருமான மனோஜ் திவாரி தொடங்கிவைத்தார். பின்னர் அவர் அபிநந்தன் குறித்த பாடலைப் பாடியதோடு இல்லாமல் ராணுவ வீரரின் சீருடை போன்ற உடையணிந்து பேரணியில் கலந்துகொண்டார். அவரது செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

மேலும் அவர் ராணுவத்தை அவமதித்து விட்டதாகவும், தற்போதைய இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தை அரசியலாக்குவதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ராணுவ வீரரின் உடையணிந்துகொண்டு ஓட்டு சேகரிப்பதற்கு வெட்கமாக இல்லையா? மோடி மற்றும் அமித்ஷா இந்திய வீரர்களை அவமதித்துள்ளனர். அவர்கள், நாட்டுப் பற்று குறித்து பாடம் எடுக்கிறார்கள்’ என்று சாடியுள்ளனர். 

இந்நிலையில் இது குறித்து தற்போது விளக்கமளித்துள்ள அவர், "நான் ராணுவத்தை நேசிப்பவன். எனது தேசப்பற்றை வெளிப்படுத்தவே அப்படி செய்தேன். அது ராணுவத்தை அவமதிப்பு ஆகாது. ஒருவேளை நாளை நான் நேருவின் ஜாக்கெட்டை அணிந்தால், அது அவரை அமவதிப்பதாக ஆகுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் விளக்கமளித்த பின்னரும் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது.