மன்மோகன் சிங் கடந்து வந்த கல்வி மற்றும் அரசியல் பாதை!!
இந்தியப் பொருளாதாரத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை இந்தியப் பிரதமராகப் பணியாற்றினார். பஞ்சாபில் பிறந்த இவர், கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். பின்னர், கல்வியாளராகவும், பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றி, இந்தியாவின் 13-வது பிரதமரானார்.
இந்திய அரசியலில் பிரித்து பார்க்க முடியாதவர் மன்மோகன் சிங். இந்தியாவின் பொருளாதாரம் உச்சத்தை தொடுவதற்கும், இந்தியாவின் பொருளாதாரத்தை உலக அரங்கிற்கு எடுத்து செல்வதற்கும் காரணமாக இருந்தவர் மன்மோகன் சிங். 2004 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் வரை நாட்டின் பிரதமராக இருந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் 1932, செப்டம்பர் 26ஆம் தேதி பிறந்தார். தற்போது இந்தப் பகுதி பாகிஸ்தான் வசம் உள்ளது.
தனது சிறு வயதில் மன்மோகன் சிங் தனது தாயை இழந்தார். தந்தை வழி பெற்றோர் தான் இவரை வளர்த்து வந்தனர்.
பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 1952ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்தார். இதைத் தொடர்ந்து 1954ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் 1957ஆம் ஆண்டில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1962ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் டி.பில் பட்டம் முடித்தார்.
மன்மோகன் சிங் கல்வித்துறையிலும் சிறந்து விளங்கினார். ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு (UNCTAD), டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆசிரியர் பணியாற்றினார்.
1958 இல், மன்மோகன் சிங் குர்ஷரன் கவுரை மணந்தார். தம்பதியருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். உபிந்தர் சிங், வரலாற்றாசிரியர் மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். தமன் சிங் எழுத்தாளர் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிபுணர். அம்ரித் சிங், அமெரிக்காவில் உள்ள அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியனில் வழக்கறிஞராக இருக்கிறார்.
மன்மோகன் சிங்கின் அரசியல் வாழ்க்கை 1971-ல் மத்திய வர்த்தக துறை அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக துவங்கியது. பின்னர், நிதி அமைச்சகத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் செயலாளராகவும் பணியாற்றினார். 2004 -ல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசை வழிநடத்தி, இந்தியாவின் 13வது பிரதமரானார் மன்மோகன் சிங்.
UNCTAD செயலகத்தில் குறுகிய காலம் பணியாற்றினார். அவர் 1987-1990 வரை ஜெனீவாவில் உள்ள தெற்கு ஆணையத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பிரதமரின் ஆலோசகர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தார்.
அவரது தலைமையின் கீழ், இந்தியா மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை சராசரியாக 7.7 சதவிகிதம் அடைந்து கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறியது. இது இந்தியாவை ஒரு பொருளாதார சக்தியாக மாற்ற உதவியது. இது மில்லியன் மக்களின் வாழ்க்கை தரத்தை உதவியது.