டெல்லி மதுக்கொள்கை ஊழல்: முதல் முறை குற்றப் பத்திரிகையில் மனிஷ் சிசோடியா பெயர் சேர்ப்பு
டெல்லி மதுக்கொள்கை ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
மதுக்கொள்கை ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இன்று தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் பாரத ராஷ்டிர சமிதியின் முன்னாள் ஆடிட்டர் புட்சி பாபு, அர்ஜுன் பாண்டே மற்றும் அமந்தீப் தால் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த வாரம், இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் 9 மணிநேரம் சிபிஐ விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் பிஆர்எஸ் தலைவருமான கவிதாவும் விசாரிக்கப்பட்டுள்ளார்.
மதுக் கொள்கை ஊழல் வழக்கு ஜோடிக்கப்பட்ட என்று கூறிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி ஒரு தேசியக் கட்சியாக மாறியுள்ளதால் அதை மத்திய அரசு குறிவைக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களையும் எங்கள் அரசின் நல்ல வளர்ச்சிப் பணிகளையும் களங்கப்படுத்தவே இப்படியெல்லாம் செய்கிறார்கள்" எனச சாடினார்.
மணீஷ் சிசோடியாவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளிடம் எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது ஜாமீன் மனுவில் கூறியுள்ளார்.
டெல்லியின் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவால் இந்த ஊழல் விவகாரம் கிளப்பப்பட்டதை அடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆன நிலையில், பிப்ரவரி 26 அன்று மனிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிசோடியா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். சிசோடியாவைத் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.
சிசோடியாவை கைது செய்தது "டெல்லியின் முன்மாதிரி ஆட்சி மீதான தாக்குதல்" என ஆம் ஆத்மி விமர்சித்தது. "அவருடைய வீடு அல்லது வங்கிக் கணக்குகளில் இருந்து எதையும் பெறமுடியவில்லை. அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் அவர்களால் நிரூபிக்க முடியவில்லை" என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி அரசின் 2021ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டது. எதிர்கொள்கின்றனர். டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்பட பலர் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர்.