அமித் ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்புங்கள்: சுப்ரமணியன் சுவாமி!
அமித் ஷாவை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
முதன்முதலாக மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மைதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3ஆம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. மோதல் பல மாவட்டங்களுக்கு பரவி வன்முறை வெடித்தது.
இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மணிப்பூர் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. மணிப்பூர் வன்முறையில் சிக்கி, இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். மணிப்பூரில் நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருவதால், அம்மாநில மக்கள் மிசோரம், நாகாலாந்து உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
அம்மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்பட்டுத்த துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மோதல் ஓய்ந்தபாடில்லை.
இந்த நிலையில், அமித் ஷாவை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக மணிப்பூர் அரசை பதவி நீக்கம் செய்து, அரசியலமைப்பின் 356ஆவது பிரிவின் கீழ் மத்திய ஆட்சியை திணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமித் ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்புங்கள். அவர் தனது மகனை பிசிசிஐயில் கவனித்துக் கொள்ள ஆர்வமாக உள்ளார்.” என பதிவிட்டுள்ளார்.