மணிப்பூரின் இம்பால் நகரில் ஞாயிற்றுக்கிழமை மூன்று வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு இடத்தில் போலீசாரின் துப்பாக்கிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள நியூ லாம்புலேன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். அவற்றில் வசித்தவர்கள் ஏற்கெனவே அங்கிருந்த காலி செய்து சென்றுவிட்டதால் கைவிடப்பட்ட நிலையில் இருந்தவை ஆகும்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்ததாக என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்த உடனேயே, மக்கள் அப்பகுதியில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் பகுதியில் நுழைபவர்களைக் சோதனைக்குப் பின் அனுமதிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் படைகளை நிலைநிறுத்துமாறு கோரிக்கையை வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் சில ரவுண்டுகள் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநர் கே.ராஜோவின் இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் பணியாளர்களிடம் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று ஆயுதங்களைப் பறித்துச் சென்றுள்ளனர் என்று மணிப்பூர் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள இம்பால் பி.எஸ். பகுதிக்கு உட்பட்ட சகோல்பந்த் பிஜோய் கோவிந்தா என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பறிக்கப்பட்ட ஆயுதங்களில் இரண்டு AK சீரீஸ் துப்பாக்கிகள் மற்றும் ஒரு கார்பைன் ஆகியவை அடங்கும் என்று போலீசார் சொல்கின்றனர்.
இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில், ஆயுதங்களை மீட்டெடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
