Manipur Election Results 2022 : மணிப்பூரில் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
60 சட்டசபை தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 20.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2017-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 28, பா.ஜனதா 21 இடங்களில் வெற்றி பெற்றன. என்றாலும் காங்கிரசுக்கு 35.1 சதவீதம் வாக்குகளே கிடைத்தன. பாரதிய ஜனதாவுக்கு 36.3 சதவீதம் வாக்குகள் கிடைத்து இருந்தன.
இதையடுத்து காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் விலகியதால் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. தற்போது மீண்டும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் மோதல் நிலவுகிறது. மணிப்பூர் மாநில மக்களுக்கு அவர்களின் உரிமையை காக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பா.ஜனதா உறுதி அளித்து ஓட்டு வேட்டையாடியது.

அதுமட்டுமின்றி கல்லூரி செல்லும் பெண்களுக்கு இலவசமாக மின்சார ஸ்கூட்டர், பெண்களுக்கு கூடுதலாக இலவசமாக 2 சமையல் கியாஸ் சிலிண்டர் தருவோம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காங்கிரசை நிலைகுலைய செய்துவிட்டது. பதிலுக்கு காங்கிரஸ் கட்சி, ‘‘பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை’’ தருவோம் என்று அறிவித்துள்ளது. அதோடு ஆயுத சட்டத்தை திரும்பப் பெறுவோம் என்றும் உறுதி அளித்துள்ளது.
நாகா பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பா.ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் பிரசாரம் செய்துள்ளன. இதனால் இந்த மாநிலத்தில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. 5 மாநிலங்களில் அதிகமான வாக்குகள் பதிவானது மணிப்பூர் மாநிலத்தில்தான். இதனால் இந்த மாநில தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 60 தொகுதிகளுக்கு உட்பட தேர்தலில் பாஜக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
