மணிப்பூரில் வன்முறையில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு; டெல்லிக்கு விரைந்த முதல்வர் பைரன் சிங்
மணிப்பூர் கலவரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ள நிலையில், முதல்வர் பிரேன் சிங் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தின் குக்கி - மெய்தி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் பிரேன் சிங் மற்றும் அவரது நான்கு அமைச்சரவை சகாக்கள் ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் மெல்ல ஓய்ந்திருந்த நிலையில், சனிக்கிழமை புதிய வன்முறை வெடித்தது. குக்கி சமூகத்தினர் மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் கிராமங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி வீடுகளுக்கு தீ வைத்தனர். இதில் குறைந்தது 15 வீடுகள் தீயில் நாசமாகியுள்ளன.
மணிப்பூரில் பெரும்பான்மை மக்களான மெய்தி சமூகத்தினருக்கும் குக்கி உள்ளிட்ட பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கான வழியைக் கண்டறிய, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற மத்திய அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசிக்க உள்ளனர். முதல்வர் பைரன் சிங் பிரதமர் மோடியையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
இதனிடையே புதிதாக தாக்குதல்களில் பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த சிலர் உயிர் பிழைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 8ஆம் தேதி, கலவரத்தில் 60 பேர் பலியாகியுள்ளனர் என்று முதல்வர் சிங் கூறியிருந்தார்.
குக்கி, சின், மிசோ, ஜோமி இன மக்கள் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டம் சூராசந்த்பூர். தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 65 கிமீ தொலைவில் உள்ள இந்த மாவட்ட எல்லையில் உள்ள தோர்பங் பகுதியில் உள்ள மெய்டேய் கிராமத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் வீடுகளை தீ வைத்து சூறையாடியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு வன்முறைக்குப் பிறகு டோர்பங்கைச் சுற்றியுள்ள பதற்றமான பகுதிகளுக்கு மேலும் ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர். அந்த கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அருகில் உள்ள நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.