Manipur assembly

மணிப்பூரில் தொங்கு சட்டசபை
ஆட்சி அமைக்க காங்கிரஸ், பா.ஜனதா கடும் போட்டி

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியும், புதிதாக தடம் பதித்த பாரதிய ஜனதா கட்சியும், ஆட்சி அமைக்க கடும் போராட்டம் நடத்தி வருகின்றன.

60 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் தேர்தல் மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. தேர்தல் முடிந்து நேற்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பாரதியஜனதா கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, லோக் ஜன சக்தி, தேசிய மக்கள் கட்சி, மற்றும் நாகா மக்கள் முன்னணி, இரோம் சர்மிளாவின் மக்கள எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் வேண்டிய நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் 3 இடங்கள் தேவைப்படுகிறது.

மாநிலத்தின் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இரோம் சர்மிளா 90 வாக்குகள் பெற்று படுதோல்வியைச் சந்தித்தார்.

மாநிலத்தில் முதல் முறையாக தடம் பதித்த பாரதிய ஜனதா கட்சி, 21 இடங்களைக் கைப்பற்றி, 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த கட்சியும் ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் 2-வதாக குறிப்பிடத்தகுந்த வெற்றியை பாரதியஜனதா கட்சி பெற்றுள்ளது. இதற்கு முன் அசாம் மாநிலத்தில் சிறப்பான வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், இப்போது மணிப்பூரிலும் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

நாகா மக்கள் முன்னணி 4 இடங்களையும், தேசிய மக்கள் கட்சி 4 இடங்களையும், லோக் ஜன சக்தி கட்சி ஒரு இடத்திலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இன்னும் 3 இடங்களே தேவைப்படும் நிலையில், மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவைக் கோரலாம். அதே சமயம், ஆட்சி அமைக்க 11 இடங்கள் தேவைப்படும் என்ற சூழலில் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைக்க பேச்சில் ஈடுபடும். இதனால், மாநிலத்தில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது.