ரூ.2,000 நோட்டைத் தொடர்ந்து மங்கள்யான் செயற்கைக்கோளுக்கு நேஷனல் ஜியோகிராபிக் இதழும் கவுரவம் அளித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த 2013ம் ஆண்டில் மங்கள்யான் எனும் விண்கலத்தை அனுப்பியது. உலக அளவில் செவ்வாய் கிரக ஆய்வுக்கு குறைந்த செலவில் அனுப்பப்பட்ட விண்கலம் என்ற பெருமையை மங்கள்யான் பெற்றது. வெற்றிகரமாக தனது இலக்கை அடைந்து, கடந்த 2014ம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகிறது.
உலக அளவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய மூன்றாவது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது. இந்த சாதனையைச் சிறப்பிக்கும் வகையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யானின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் அதிக ரெசலூஷன் கொண்ட புகைப்படங்களுக்குப் பெயர் போன நேஷனல் ஜியோகிராபிக் இதழின் அட்டைப்படத்தில் மங்கள்யான் விண்கலம் எடுத்த செவ்வாய் கிரகத்தின் படம் இடம்பிடித்துள்ளது. செவ்வாய் கிரகம் குறித்து பல்வேறு நாடுகளின் விண்கலங்கள் எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்த நேஷனல் ஜியோகிராபிக் இதழ், மங்கள்யானின் குறைந்தவிலை லென்ஸ்கள் எடுத்த புகைப்படமே நல்ல தரத்தில் இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளது.
