Asianet News TamilAsianet News Tamil

வந்தே பாரத் ரயிலில் சிகரெட் பற்ற வைத்த நபர்: காட்டிக் கொடுத்த தொழில்நுட்பம்!

நவீன தொழில்நுட்பம் இருப்பது தெரியாமல் வந்தே பாரத் விரைவு ரயிலில் சிகரெட் பற்ற வைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

Man lights Cigarette on Tirupati Hyderabad bound Vande Bharat train
Author
First Published Aug 10, 2023, 11:49 AM IST

மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு வந்தே பாரத்  அதிவேக ரயில்கள் 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாநிலத்திலும் வந்தே பாரத்  ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார்.

ஆனால், வந்தே பாரத் ரயில்கள் ஏதேனும் சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருகிறது. கல் வீசு தாக்குதல் நடத்துவது, கால்நடைகள் மீது மோதுவது, வேகமாக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு என வந்தே பாரத் ரயில்கள் செய்திகளில் அடிக்கடி இடம் பெற்று வருகிறது. அந்த வகையில், வந்தே பாரத் ரயில் ஒன்று தற்போது செய்தியாகியுள்ளது. இந்த முறை, அதன் நவீன தொழில்நுட்பத்தால் கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரை பற்றியது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து செக்கந்திராபாத் சென்ற வந்தே பாரத் ரயிலில் குண்டூர் ரயில் நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது, டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறிய பயணி ஒருவர், தன்னை பாதுகாத்துக் கொள்ள கழிவறைக்கு சென்று பூட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்படியே பேசாமல் உட்கார்ந்திருந்தால் ஒருவேளை அவர் இலவசமாகவே பயணம் செய்திருப்பார். ஆனால், விதி யாரை விட்டது.

இந்தியாவில் அதிகரிக்கும் உறுப்பு தானம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

கழிவறையில் இருந்த அவர், தனது பையில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துள்ளார். வந்தே பாரத் ரயிலில் தீப்பிடித்தால் தானியங்கி முறையில் தீயை அணைக்கும் கருவி, அலாரம் அடிக்கும் கருவி என நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தெரியாமல், அவர் சிகரெட்டை பற்ற வைத்ததும், தானியங்கி தீயை அணைக்கும் கருவி வேலை செய்யத் தொடங்கியது. அலாரங்கள் ஒலிக்கத் தொடங்கின. பெட்டியில் உள்ள தீயை அணைக்கும் ஸ்ப்ரே அடிக்கத் தொடங்கியது.

இதனால், பதற்றமடைந்த பயணிகள் ரயில் பெட்டியில் உள்ள அவசரகால தொலைப்பேசி மூலம் ரயில் காவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மனுபுலு ரயில் நிலையம் அருகே ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு கருவி மூலம் கழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்த போது, உள்ளே அந்த நபர் புகைப்பிடித்ததுதான் இவ்வளவு பிரச்சினைக்கு காரணம் என கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த நபரை விசாரிக்கும் பொருட்டு நெல்லூர் ரயில்வே காவல்நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அதன்பிறகு, அந்த ரயில் தனது பயணத்தை தொடர்ந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios