இசுலாமிய மார்க்கத்தில் விவாகரத்து செய்ய முத்தலாக் என்கிற நடைமுறை இருக்கிறது. அதன்படி ஒரு ஆண் மூன்றுமுறை தலாக் கூறி தனது மனைவிக்கு விவாகரத்து கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இது இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து முத்தலாக் நடைமுறையை இந்தியாவில் தடை செய்ய தீவிர முயற்சி எடுத்து வந்த மத்திய அரசு, சமீபத்தில் அதற்கு சட்டம் இயற்றியது.

இந்த சட்டத்தின் கீழ் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது.

இந்த நிலையில் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இருக்கும் குட்லு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.எம் அஸ்ரப்(34). இவர் தற்போது வளைகுடா நாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானு(29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கேரளாவில் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே மனஸ்தாபங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே வெளிநாட்டில் இருந்தபடி அஸ்ரப் தனக்கு வாட்ஸ் அப் வழியாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அஸ்ரப் மீது புதிய முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இருதரப்பிலும் விசாரணை நடத்திய பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சைபர் கிரைம் போலீசாரின் சார்பிலும் விசாரணை நடத்த உத்தரவிப்பட்டுள்ளது.

முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கேரளாவில் இது இரண்டாவது வழக்கு என்பது கூறிப்பிடத்தக்கது.