டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் இருந்த புழு!
டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இன்னும் இரண்டு நாட்களில் காதலர் தினம் வரவுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு க்ரீட்டிங் கார்ட்ஸ், பூக்கள், சாக்லேட் விற்பனை களைக்கட்டியுள்ளது. குறிப்பாக, டெய்ரி மில்க் சாக்லேட்டிற்கும் காதலர் தினத்துக்கும் தனி பந்தம் உள்ளது. தங்களது, காதலன் அல்லது காதலிக்கு டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கி கொடுத்து இளசுகள் தங்களது ரொமான்ஸை வெளிப்படுத்துவர். காதலர் தினம் அல்லாத நாட்களிலும் டெய்ரி மில்க் சாக்லேட்டிற்கு என்று மக்கள் மனதில் தனி இடம் உண்டு.
இந்த நிலையில், டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ராபின் சாக்கியஸ் என்பவர் ஆசையாக சாப்பிடுவதற்கு ரூ.45 கொடுத்து டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கியுள்ளார். அதனை பிரித்து Kiss Me, Close Your Eyes என்று வாயில் வைக்க போனவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், புழு ஊர்ந்து செல்லும் வீடியோவுடன் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில், அமீர்பேட்டை மெட்ரோ நிலையத்தில் உள்ள ரத்னதீப் ரீடெய்ல் ஸ்டோரில் இருந்து ரூ.45 செலுத்தி டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கியதாக அதன் பில்லையும் அதனுடன் அவர் இணைத்துள்ளார். மேலும், “காலாவதியாகும் பொருட்களுக்கான தர சோதனை உள்ளதா? பொது சுகாதாரக் கேடுகளுக்கு யார் பொறுப்பு?” எனவும் ராபின் சாக்கியஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது இந்த பதிவு உடனடியாக வைரலானது. டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஊர்ந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் தங்களது கவலையையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், கேட்பரி நிறுவனத்தின் மீது வழக்கு தொடருமாறு பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் கூறுகையில், உணவுப் பாதுகாப்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பாஜக அரசு 1.5 மடங்கு அதிகமாக வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!
அதேபோல், கேட்பரி டெய்ரி மில்க் நிறுவனமும் இதற்கு பதிலளித்துள்ளது. “வணக்கம், Mondelez India Foods Private Limited (முன்னாள் Cadbury India Ltd) மிக உயர்ந்த தரத்தை பராமரிக்க முயற்சிக்கிறது. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து வருந்துகிறோம். உங்கள் கவலையை எங்களுக்குத் தெரிவிக்க, Suggestions@mdlzindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் கொள்முதல் விவரங்களை அனுப்பவும். உங்கள் புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நன்றி!” என பதிவிட்டுள்ளது.
Vetri Duraisamy சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் மீட்பு!