உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மின்சாரத்தையே உணவாக உட்கொண்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். மக்கள் அவரை அதிசய மனிதர் என்று அழைத்து வருகின்றனர்.

சாமானிய மக்களுக்கு பசியெடுத்தால் அவர்கள் அரிசி கோதுமை போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டு தனது பசியை தீர்த்துக் கொள்வார்கள். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்த நரேஷ் குமார் என்பவருக்கு பசி ஏற்பட்டால், அவர் பல்புகளை எரிய விட்டு அதன் ஒயர்களை தனது வாயில் பயமில்லாமல் வைத்து கொள்கிறார். இப்படி நரேஷ்குமார் 30 நிமிடங்கள் செய்தால் அவரின் பசி அடங்கி விடுகிறது. இதேபோன்று பலமுறை மின்சாரத்தை உட்கொண்டு நரேஷ் குமார் தனது பசியை தீர்த்துள்ளார்.

சாதாரணமாக மின்சார ஒயரை தொட்டாலே சில மீட்டர் தூரத்திற்கு மனிதர்கள் தூக்கி வீசப்படுவார்கள். ஆனால் நரேஷ்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்தால் அவருக்கு ஆபத்து எதுவும் ஏற்படுவதில்லை. முன்பு ஒரு முறை ஏதேச்சையாக மின்சார ஒயரை தொட்டுள்ளார். ஆனால் மின்சாரம் அவர் மீது பாயவில்லை. இதிலிருந்து தான் தனக்கு அபூர்வ சக்தி உள்ளது என நரேஷ் நம்ப தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து நரேஷ்குமார் கூறும்போது, தொலைக்காட்சி பெட்டி, வாஷிங் மிஷின், குளிர்சாதன பெட்டி என என எல்லா வகையான மின்சார பொருட்களையும் நான் வெறும் கையால் தொடுவேன். என் மீது மின்சாரம் பாயாது, வீட்டில் உணவில்லாத போது மின்சார ஒயர்களை வாயில் வைத்து கொண்டால் பசி அடங்கி விடும் என்றார். இந்த அதிசய மனிதர் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.