சைக்கிள் திருடிய வழக்கில் 38 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளியை கர்நாடக மாநில போலீசார் கைது செய்துள்ளனர்

கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் ஆண்டர்சன்பேட்டையை சேர்ந்தவர் ஜான். அப்பகுதியின் ST Blockஇல் வசிக்கும் இவரது சைக்கிள் கடந்த 1985ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளது. அப்போது அந்த சைக்கிளின் விலை ரூ.250 என தெரிகிறது. இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்த போலீசார், சைக்கிள் திருடியதாக பாஷா ஜான் என்பவர் மீது சந்தேகமடைந்துள்ளனர். இருப்பினும், அவர்களால் பாஷா ஜானைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அவர் மீது குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். பாஷா ஜான் விசாரணைக்கு ஆஜராகாததால், அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை நீதிபதி பிறப்பித்தார்.

ஆனால், பாஷா ஜான் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல போலீசாரும் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளில் உள்ள அனைத்து நபர்களையும் கண்டுபிடிக்குமாறு கேஜிஎஃப் காவல் கண்காணிப்பாளர் கே.எம்.சாந்தராஜு சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தார்.

மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோர் கைது: சவுதி அரேபியா புதிய உத்தரவு!

அதன் தொடர்ச்சியாக, தற்போது 62 வயதாகும் பாஷா ஜானை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு இந்த முறை பெரிதாக சிரமங்கள் இருக்கவில்லை. அவரது கைரேகைகள் ஏற்கனவே போலீசாரிடம் இருந்ததால், அவரது அடையாளத்தை போலீசாரால் உறுதிப்படுத்த முடிந்தது. கைது செய்யப்பட்ட பாஷா ஜானை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.