நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கும் பாஜகவுக்கும் ரசகுல்லாதான் கிடைக்கும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரினாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கிண்டலாகப் பேசினார்.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. முதலர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கம் முழுவது சென்று பிரசாரம் செய்துவருகிறார். பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக பிரமுகர்களும் மேற்கு வங்காளத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலம் தினாஜ்பூரில் மம்தா பானர்ஜி பிரசாரம் மேற்கொண்டார். 
அங்கே நடந்த பிரசாரக் கூட்டத்தில் மம்தா பேசும்போது பாஜகவையும் பிரதமர் மோடியையும் தாக்கி பேசினார். “இந்தத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றும் என பிரதமர் மோடி பகல் கனவு காண்கிறார். ஆனால், அவருக்கு ரசகுல்லாதான் கிடைக்கப் போகிறது. தேர்தலில் பாஜகவுக்கு ஒட்டுமொத்தமாக 100 இடங்களுக்கு மேல் கிடைக்காது. ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது” எனத் தெரிவித்தார்

.
 நாடாளுமன்றத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று பிரதமர் மோடி பேசிவருகிறார். சென்ற தேர்தலைவிட இந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் வெற்றி குறைந்தால், அதை மேற்கு வங்கம் ஈடு செய்யும் என்றும் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு ரசகுல்லா (பூஜ்ஜியம்) கிடைக்கும் என்று மம்தா பேசியிருக்கிறார்.