கடந்த 8ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
இதனைதொடர்ந்து வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் போதிய பணம் கிடைக்காததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து செல்வதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனிடையே, உத்தரபிரதேச மாநிலம் காசியாப்பூரில் இன்று நடைபெற்ற ரயில்வே இருப்பு பாதை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடிகலந்து கொண்டு ரயில்வே திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் ஏழை மக்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள்.
ஆனால் வரி ஏய்ப்பு செய்தவர்கள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். அவர்கள் தூங்குவதற்கு தூக்க மாத்திரையை வாங்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்’என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரதமரின் இந்த கருத்திற்கு கண்டம் தெரிவித்துள்ள மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இது சராசரி மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இழிவு என்றும், ஏழை மக்களின் மீது இதுபோன்ற தாக்குதலை நடத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
புழக்கத்தில் உள்ள 5௦௦, மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை செல்லாது என திடீரென அறிவித்த பிரதமரின் செயல், மக்களை கொல்லவந்த ஆயுதம் என்றும்இந்த அறிவிப்பால் கடந்த 6 நாட்களில் மட்டும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
