டெல்லியில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூட்ட உள்ள கூட்டத்தில் மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோர் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


 நாடாளுமன்றத்துக்கு இன்னும் ஒரு கட்டத் தேர்தல் மட்டுமே எஞ்சியுள்ளது. வரும் 19-ம் தேதியுடன் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைகிறது. இதனையடுத்து மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. இந்தத் தேர்தலில் 200-க்கும் குறைவான இடங்களையே பாஜக கூட்டணி பிடிக்கும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்புகின்றன.
இதை மனதில் வைத்து தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சியமைக்கும் பணிகளை சில எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தேர்தல் முடிவுக்கு இரு தினங்களுக்கு முன்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்துவருகிறார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்பட 21 கட்சிகள் பங்கேற்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. 
இந்தக் கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகியோரையும் நேரில் சந்தித்து பேசியிருந்தார் சந்திரபாபு. ஆனால், இந்தச் சந்திப்பின்போது எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு ராகுல் சிக்னல் கொடுத்துவிட்டார். ஆனால், மம்தா பானர்ஜியோ தேர்தல் முடிவுக்கு முன்பாக கூட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், அது மட்டுமே காரணமில்லை. காங்கிரஸை வைத்துகொண்டு கூட்டம் போட்டால், அது காங்கிரஸ் தலைமையிலான அணியாகவே இருக்கும் என்பது மாயவதி, மம்தா ஆகியோர் நினைக்கிறார்கள். 1996-ல் அமைந்ததைப்போல மாநில கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைந்தால், கூட்டணி கட்சிகளிலிருந்து ஒருவரை பிரதமராகத் தேர்வு செய்ய முடியும். காங்கிரஸை வெளியிலிருந்து ஆதரவு தர வைக்கலாம் என்றும் இவர்கள் கருதுவதாகக் கூறப்படுகிறது. 
அந்த அடிப்படையில் காங்கிரஸ் பங்கேற்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் இந்த இரு தலைவர்களும் பங்கேற்கமாட்டார்கள் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை காங்கிரஸ் கூட்டணியைத் தாண்டி வெளியே உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு வராமல் போனால், தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டத்தை நடத்தவும் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.